அதிக வெப்பநிலையில் வரையப்பட்ட கருப்பு, நீல குதிரைகளின் ஓவியம், அலைபேசியை முதன்முதலாகப் பேசும் ஏழையின் ஓவியம், தகதகவென கனலுடன் புகைப்பிடித்துக் கொண்டிருக்கும் விவசாயின் ஓவியம், பல்வேறு வண்ணங்களுடன் மங்கையர்களின் இன்பமான வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் ஓவியம் என பீங்கானில் தூரிகை தொடாத துறைகளே இல்லை எனலாம். அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டவாறே முன்னேறினால், முதிய ஓவியர்கள் முதல் இளம் ஓவியர்கள் வரை, எப்படி, பீங்கானில் ஓவியம் வரைகின்றனர் என்பதையும் காணலாம். இதனையெல்லாம் பார்த்தபின், கலையின் மீது ஆர்வம் கொண்ட நபரின் கைகள் சும்மா இருக்குமா. அதை உணர்ந்து வைத்துள்ள அருங்காட்சியம், பார்வையாளர்கள் வரைவதற்கென சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளது. தூரிகையை தொடாத கைகளுக்கு கூட அடிப்படையாக எப்படி வரைவது என்று உணர்த்த ஆசிரியர்கள் அங்கு இருப்பது கூடுதல் அம்சம். நான்ஜங் பீங்கான் ஓவிய அருங்காட்சியகத்துக்குள் சென்று திரும்பினால் மனது முழுவதும் பீங்கானில் வரையப்பட்டுள்ள உருவங்கள் படர்ந்திருப்பதை உணரலாம்.