• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தாந்திரீகச் சிற்பி ஓவியர் கே. எம். கோபால்
  2017-03-14 10:59:19  cri எழுத்தின் அளவு:  A A A   

ஓவியக்கலையில் கவனம் செலுத்தாமல் இருக்கும் கே.எம்.கோபாலைக் கண்ட தேவிஸ்ரீ ராய்பிரசாத் சௌத்ரி, திரு.நரசிம்மாச்சாரி என்பவரை அனுப்பி இலட்சுமி, சரசுவதி, இராசராசேசுவரி போன்றோரின் ஓவியங்களை வரைந்துதரும் பணியைக் கொடுத்தார். கோபாலின் ஓவியங்களின் தத்ரூபங்களைக் கண்ட நரசிம்மாச்சாரி, தனக்கு ஒரு ஸ்ரீ சக்கரம் ஒன்றும் வரைந்துத் தரச் சொன்னார். இந்த ஸ்ரீ சக்கரத்தை வரையும் முயற்சியே கோபால் அவர்களை மீண்டும் ஓவியக்கலைக்கு இழுத்தது, அதிலும் குறிப்பாக தாந்த்ரீக ஓவியக்கலைக்குள் இழுத்தது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போன்று கலைஞர்களுக்கென சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் சோழமண்டலக் கலைஞர்கள் கிராமம் என்னும் இடத்தை உருவாக்கினார். இந்தியாவின் லலிதா கலா அகாதெமியில் பிரதிநியாக பணியாற்றிய இவர், சென்னை ஓவியம் நுண்கலைக்குழு, மறுமலர்ச்சி ஓவியர் எழுத்தாளர் மன்றம், சேலம் கண்காட்சியகம் போன்றவை உருவாக பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

1988-இல் புதுதில்லியில் நடந்த அகில இந்திய ஓவியக்கண்காட்சியில், தேசிய அளவில் முதல் பரிசு பெற்றார் கே.எம்.கோபால். இவரது திறமையைப் பாராட்டி இங்கிலாந்து அரசு, இங்கிலாந்திற்கு வருகைத் தரும் ஓவியர் என்ற கௌரவத்தைக் கொடுத்தது. அது மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும் சென்று வருமாறு அழைப்பு விடுத்தது. பிரான்சு, நெதர்லாந்து, மேற்கு செர்மனி, பெல்சியம், போன்ற நாடுகளுக்குக் கலைப்பயணம் மேற்கொண்ட கே.எம்.கோபால், தான் சென்ற இடமெல்லாம் தாந்த்ரீக ஓவியங்களின் சிறப்பைப் பற்றி விவரித்து, இந்தியாவின் ஓவிய பாரம்பரியத்தை ஐரோப்பிய நாடுகளில் முறையாக அறிமுகம் செய்து வைத்தார்.

விநாயகர் வடிவமே யோகக்கலையின் முதல் குறியீடுதான் என்பதை உணர்ந்த கோபால் வேதநூல்கள் கூறும் 1008 கணபதியர்களை இதுவரை ஓவியர்கள் ஓவியங்களில் தீட்டியதில்லை என்பதை அறிந்து, பெயரால் மட்டுமே அறியப்பட்ட விநாயகர்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தார். விநாயகர் பற்றிய தமது ஆராய்ச்சிக்கு கணபதியம் என்று பெயரிட்டார்.

கே.எம்.கோபாலின் ஓவியங்கள், மற்றும் உலோகப்புடைப்பு சிற்பங்கள், உலகின் பல முன்னணி கலைக்கூடங்களிலும், கண்காட்சியகங்களிலும், மற்றும் இந்தியாவின் முன்னணி வணிக நிறுவனங்களிலும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. போலந்து நாட்டின் ஆசிய பசிபிக் அருங்காட்சியகம், அமெரிக்காவில் செனிவா அருங்காட்சியகம், செர்மனியில் ராய் போகி அருங்காட்சியகம், கெல்னா வில்கெய்ம்ன் அருங்காட்சியகம், அங்கேரியில் பாடு பாசிக் அருங்காட்சியகம், விசயநகர் இராணி அரண்மனை, நெதர்லாந்து அரசியார் அரண்மனை, பாரீசில் சோபி லெசுக்காட் இல்லம், புதுதில்லி தேசிய ஓவிய காட்சிக் கூடம், சென்னை தேசிய ஓவியக்காட்சிக் கூடம், சேலம் அருங்காட்சியகம் என இவரது கலைப்படைப்புகள் இல்லம் கொண்டுள்ள இடங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

அதிகாலையில் வீட்டு வாசலைப் பெருக்கி, முற்றத்தில் கோலமிடும் தமிழ்ப் பெண்களை முதல் ஓவியர்கள் என்று வர்ணிக்கும் கே.எம்.கோபால், பாரம்பரியத்தை முன்னிறுத்தாத எந்தக் கலையும் தன் முழுமையை அடையாது என்று எண்ணி தை நோக்கிச் செயல்பட்டவர் ஆவார்.

கே.எம்.கோபாலின் கலையை அவரது நினைவுநாளான இன்று, கலைப்பயணம் செய்யும் அனைவருக்கும் அர்ப்பணம் செய்வதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040