எஸ். சுந்தரனும் கடிகா சலமும்
வணக்கம். நேயர்களே, அடுத்து சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் பொன் விழா எனும் பொது அறிவுப்போட்டிக்கான முதலாவது கட்டுரையை வழங்குகின்றோம். இன்றைய நிகழ்ச்சியில் தமிழ் ஒலிபரப்பின் 50 ஆண்டு வளர்ச்சி பற்றி கூறுகின்றோம். தொகுத்து வழங்குபவர், வாணி, நிறைமதி.
சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு, இந்தியாவை முக்கிய இலக்கு நாடாகக் கொண்டு ஒலிபரப்புச் சேவை புரிகிறது. அதே வேளையில், இலங்கை முதலிய தமிழ் மொழி பேசும் பிரதேசங்களுக்கும் நிகழ்ச்சிகளை வழங்குகின்றோம். 1963ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒலிபரப்புக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படத் துவங்கியது. அதே ஆண்டு ஆகஸ்டு முதல் நாள் தமிழ்ப் பிரிவு அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டு ஒலிபரப்புச் சேவையைத் தொடங்கியது. அப்போது, சீன வானொலி பீகிங் வானொலி என்று அழைக்கப்பட்டது. நாள்தோறும் 30 நிமிட நேர நிகழ்ச்சிகளை இரண்டு முறை ஒலிபரப்பு செய்து வந்தது.
கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளில், தமிழ்ப் பிரிவில் வானொலி அமைப்பு முறை சீர்திருத்தம் நடைபெற்றது. அதன் பிறகு, தமிழ்ப் பிரிவின் பல்வகை நிகழ்ச்சிகளால் பெருமளவிலான நேயர்கள் ஈர்க்கப்பட்டனர். 1963ஆம் ஆண்டு, நேயர்களிடமிருந்து இரண்டு கடிதங்கள் மட்டுமே கிடைத்த நிலை 80ஆம் ஆண்டுகளில் பெரும் மாற்றத்தைச் சந்தித்தது. அத்துடன், சீன வானொலி தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்சிகளில் பெரும் ஆர்வம் கொண்ட நேயர்கள், நேயர் மன்றங்களை நிறுவத் தொடங்கினர். அதன் பின்னர் நேயர்கள் கடித எண்ணிக்கை வியப்பூட்டும் வகையில், விரைவாக அதிகரித்தன. அப்போது, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், சௌதி அரேபியா முதலிய பத்துக்கு மேலான நாடுகளைச் சேர்ந்த எமது நேயர்கள் நிகழ்ச்சிகளைக் கேட்டு கடிதங்களை அனுப்பினர். தமிழ்ப் பிரிவின் நேயர் கடிதங்களின் எண்ணிக்கை, சீன வானொலி நிலையத்தில் முன்னணியில் இருந்து வருகிறது.
தற்போது ,சீன வானொலித் தமிழ்ப் பிரிவு, நேயர்களுடன் நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்தி வருகிறது. ஆண்டுதோறும் நேயர் கடிதங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2010ஆம் ஆண்டில், 5 லட்சத்து 61 ஆயிரத்துக்கு மேலான கடிதங்கள் கிடைத்தன. நேயர் தொடர்புப் பணியை மேலும் பயன் தரும் முறையில் கையாளும் வகையில், நேயர் மின்னணுப் பதிவேடு 2002ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.