தி.கலையரசி
சீனத் தமிழொலி எனும் சீனாவின் முதலாவது தமிழ் மொழி இதழ் 2004ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தமிழ்ப் பிரிவால் வெளியிடப்பட்டது. சீனத் தமிழொலி இதழ் நேயர்களுக்கிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
2000ஆம் ஆண்டு தொடங்கி, கட்டுரை மற்றும் அறிவுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. அதாவது, அப்போட்டியில் பங்குகொண்டு சிறப்பு நேயராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், சீனாவில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்று வருகின்றார்.
மக்கள் சீனம், விளையாட்டுச் செய்திகள், நேயர் கடிதம், மலர்ச்சோலை, சீனாவில் இன்பப் பயணம், தமிழ் மூலம் சீனம், அறிவியல் நிகழ்ச்சி, நேருக்கு நேர், உங்கள் குரல், நேயர் விருப்பம், முதலிய நிகழ்ச்சிகள், நேயர்களுக்கிடையில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிகழ்ச்சிகளாகும்.
இந்தப் போக்கில் அதிக மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு தமிழ்ப் பிரிவில் சேர்ந்தனர். சீன ஆசிரியர்களிடமிருந்து சீன மாணவர்கள் தமிழ் மொழிக் கல்வி பெறுவதில் பல தமிழ் நண்பர்கள் தமது வியப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
21ஆம் நூற்றாண்டில் நுழைந்த பிறகு, தமிழ்ப் பிரிவு மேலதிக முன்னேற்றம் காணத் தொடங்கியது. 2004ஆம் ஆண்டு ஜுலை 15ஆம் நாள், 30 நிமிடங்கள் ஒலிபரப்பாகி வந்த சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்சிகள் நாள்தோறும் ஒரு மணி நேர ஒலிபரப்பாக மாறி, முதல் ஒலிபரப்பு, மறு ஒலிபரப்பு என மொத்தம் இரண்டு மணி நேரமாகியது.
2003ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள், தமிழ்ப் பிரிவின் இணைய தளம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. பிறகு, 2009ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் இந்த இணைய தளம் முதன்முறையாகச் சீரமைத்து வடிவமைக்கப்பட்டது. பிறகு, 2013ஆம் ஆண்டு ஜனவரி திங்களில், இரண்டாவது முறையாக அது சீரமைக்கப்பட்டு, மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்போது, எங்கள் இணைய தளத்தில், ஒலி, ஒளி, படங்கள் கொண்ட பல்லூடக வடிவத்தில், சீன மற்றும் உலகச் செய்திகள், சீனப் பண்பாடு, சீனச் சுற்றுலா பயணம், சீனாவில் தமிழர்கள், சீன மொழிப் பாடம் என பலதரப்பட்ட சிறந்த, சிந்தைக்கு விருந்தளிக்கும் தகவல்களை அளிக்கின்ற ஒலிபரப்பாகச் சீன வானொலித் தமிழ் ஒலிபரப்பு மாறியுள்ளது.