• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகின் எட்டாம் அதிசயம்
  2015-03-12 09:47:39  cri எழுத்தின் அளவு:  A A A   

உள்ளே மூன்று குழிகள் இருப்பதாகவும், முதற் குழியே முதலும் பெரியதும் என்றும், 6000 மேற்பட்ட உருவங்கள் அங்கே இருப்பதாகச் சொல்லப்படுவதாகவும், இரண்டாம் குழியில் 900 வரையிலும், மூன்றாவது குழியில் 55 வரையிலும் உள்ளன என்று பெரிய பெரிய எண்களைச் சொன்ன படியே வழிகாட்டி எங்களை அழைத்துச் சென்றார். இங்கிருந்த கல்வெட்டில் இவையெல்லாம் எழுதப்பட்டு இருந்தன. வீரர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் 10000க்கும் மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவாம். வருடத்திற்கு இப்போதெல்லாம் 70 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்ற இடமாக அது மாறியுள்ளதாம்.

வாயிலிலிருந்து 10 நிமிட நேரத்தில் நடந்து செல்லலாம். நடக்க இயலாதவர்களுக்கு சிறு வண்டிகள் அங்கே இருந்தன. நாங்கள் பேசிய படியே நடக்க ஆரம்பித்தோம்.

தன்னுடைய சமாதியை தெற்கில் லி ஷான் மலைப் பகுதிக்கும், வடக்;கில் வைய் நதிக்கு இடையிலும் இருந்த பெரிய பரந்த வெளியில் செய்ய திட்டமிட்டு கட்ட ஆரம்பித்தாராம்.

2200 வருடங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட களிமண் சிலைகளை அந்த கிராமத்தில் இருந்த உழவர்கள் 1974இல் நீர் தேடி தோண்டிய போது கண்டுபிடித்தார்களாம். எட்டு அடி ஆழத்திற்குச் சென்ற போது, மண் பாண்டத்தால் ஆன தலையைக் கண்ட போது, இது ஏதோ பில்லி சூன்யம் என்று எண்ணியவர்கள், முழு உருவம் கிடைத்த போது அரசாங்கத்திற்குத் தெரிவித்தார்களாம். பின்னர் அதன் அருகே இருக்கும் பகுதியை மெல்ல அகழ்ந்த போது, மேலும் உருவங்கள் கிடைக்க கிடைக்க, அது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று அறிந்து, அந்த இடத்தைச் சுற்றி இருந்த இடத்தை அரசாங்கம் பாதுகாக்க ஆரம்பித்து ஆகழ்வாராய்ச்சியைத் துவங்கியதாம். இந்த 40 ஆண்டுகளில் மேலும் மேலும் உருவங்களை எடுத்து மூன்று புதை குழிகளைக் கண்டுபிடித்து அதை அருங்காட்சியகங்களாக 1979இல் மாற்றிவிட்டார்கள். தற்போது இது உலக பராம்பரியம் மிக்க இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

சரி இவற்றைச் செய்தவர் யார்? உலகின் அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரைக் கட்டிய மன்னரான சின் ஷி ஹ_வாங் தான், தான் இறந்த பிறகு, மறுபிறவியில் பாதுகாப்பிற்காக இப்படிப்பட்ட களிமண் படைவீரர்களைச் செய்து தன் கல்லறையுடன் வைக்க விரும்பி, அதைச் செய்தும் இருக்கிறார். 49ஆம் வயதிலேயே இறந்த போதும், இன்று வரையிலும் பெயர் கூறும் வகையில் இரண்டு பெரும் படைப்புகளை உருவாக்கிய பெருமை அவரைச் சேரும். அத்துடன் பல சிறு சிறு பேரரசுகளாக விளங்கிய சீனாவை ஒன்றிணைத்து ஒரு பெரும் சீனப் பேரரசை உருவாக்கிய பெருமையும் இவரைச் சாரும்.

முக்கிய நுழைவாயிலுக்குள் நுழைந்ததும், எதிரே மூன்று பக்கங்களில் பெரிய பெரிய கட்டிடங்கள். நேர் எதிரே இருந்த இடத்திற்கு முதலில் சென்றோம். அதுவே முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட குழி. மிகப் பெரிய கூடாரத்தின் கீழ், இணையத்தில் படங்களில் கண்டது போல் 8 அடி குழிக்குள் உருவங்கள் வரிசையாக நின்றிருந்தன.

வீரர்கள் வெகு நேர்த்தியான வரிசையில் நின்றிருந்தார்கள். நான்கு வரிசைகள். நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள். இது போன்ற பல குழுக்குள் அடுத்தடுத்த பகுதிகளில். முதல் வரிசை வீரர்கள் தலைகள் முடியிடப்பட்டு மட்டுமே காணப்பட்டது. அவர்கள் காலாட்படை வீரர்களாம். சில வரிசைகளுக்குப் பிறகு, இறகு வைத்த தலையுடன் சில உருவங்கள். அவர்கள் மேல் அதிகார வீரர்களாம். அதற்குப் பின் இருந்த சில உருவங்கள் சாய்வான தொப்பி போன்ற அமைப்பு கொண்ட தலையணியை அணிந்திருந்தார்கள். அவர்கள் சேனாபதியாக இருக்கலாமாம். ஒவ்வொரு உருவமும் வேறுபட்ட முக, உடல் அமைப்புடன் இருந்தன. எப்படித்தான் இத்தனை உருவங்களைச் செய்தார்களோ? ஒரு பாண்டம் செய்பவர் 40 உருவங்களைச் செவ்வனேச் செய்து காட்ட வேண்டும். தவறு கண்டுபிடிக்கப்பட்டால் உடனே சிரச்சேதம் செய்யபட்டனர் என்று ஒரு கதையையும் சொன்னார் வழிகாட்டி.

சில புகைப்படங்களை எடுத்து கொண்ட பின் மெல்ல நகர்ந்தோம். அப்போது இடது கோடியைக் காட்டி, அந்த இடத்தில் தான் 1974இல் ஒரு விவசாயி நீர் தேடி கிணறு வெட்டத் தோண்டிய போது உருவம் கிடைக்க, அதை அரசாங்கத்திடம் தெரிவித்ததாகக் காட்டினார். அங்கே பலரும் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதற்கு 10 யுவான் தந்தால் படம் எடுத்துக் கொள்ளலாம்.

பிறகு நாங்கள் வலது பக்கமாக நடக்க ஆரம்பித்தோம். வீரர்கள் வரிசையாக நின்றிருந்தது, ஊர்வலங்களில் வீரர்கள் நிற்பது போன்று இருந்தது. மிகப் பிரம்மாண்டமான கூடாரத்தில் பற்பல இடங்களில், மண் மேடுகளும், உடைந்த உருவங்களும் காணப்பட்டன. கடைசியாக ஓரத்தில் நின்ற வீரர்கள் திரும்பி நிற்பது, அந்தப் படைப் பகுதியின் முடிவாகக் கருதப்பட்டது. இந்த 40 வருட காலத்தில், சிறிது சிறிதாக இடத்தை அகழ்ந்து, உருவங்களைத் தேடி எடுத்து, உடைந்த அங்கங்களை ஒட்ட முயன்று, வெற்றி பெற்ற உருவங்கள் நிற்க வைக்கப்பட்டிருப்பதையும் மற்ற இடங்கள் இன்னும் சரி செய்யப்பட்டு வருவது பற்றியும் கூறினார். இத்தனை வீரர்களும் களிமண்ணால் செய்யப்பட்டாலும் 2000 வருடங்களுக்கு மேலாக அழியாமல் நிற்பது பேரதிசயம் தானே. வீரர்கள் அனைவரும் ஒரு மரப்பலகையால் மூடப்பட்டிருந்திருக்கலாம். அதனுள்ளே யாரும் செல்லக் கூடாது என்பதற்காக விஷமாக இருக்கக்கூடிய பாதரசத்தை அந்த அறைக்குள் விட்டிருந்தனர் என்று கண்டுபிடித்துள்ளனர். மேலே மண் படிந்து இவ்விடம் காணாமல் போனது. சில சமயங்களில் விவசாயத்திற்காக வெட்டும் போது, அந்த மரப்பலகை சரிந்து, வீரர்களை உடைத்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அங்கு 6000க்கும் மேற்பட்ட உருவங்கள் இருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் கண்களில் தென்படுவதென்னவோ ஆயிரம் உருவங்கள் மட்டுமே. அவை முழு உருவங்கள். மற்றவை இன்னும் முழுமை ஆக்கப்படவில்லை என்று அறிந்து கொண்டோம்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040