• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகின் எட்டாம் அதிசயம்
  2015-03-12 09:47:39  cri எழுத்தின் அளவு:  A A A   

பற்பல திசைகளில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, இரண்டாம் குழிக்குப் போனோம். அங்கு 900க்கும் மேற்பட்ட உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டனவாம். இது முதற் குழி போல் இல்லாமல், சில குதிரைகளும் உடைந்த சில உருவங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இடது புறம், பல வீரர்களின் முழு உருவங்கள் கண்ணாடிப் பேழைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. அதில் சாதாரண வீரன் எப்படி இருப்பான் என்பதை அறிந்து கொள்ளலாம். முழுமையாக உருவத்தைப் பக்கத்தில் பார்த்த போது, அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட உடல் கவசம், அதன் மேல் ஓடிய நூல், நுணுக்கமாகச் செய்யப்பட்ட வீரரின் தலைமுடியும் சிகை அலங்காரமும் நிச்சயம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அடுத்து உட்கார்ந்த நிலையில் ஒரு உருவம். அடுத்து குதிரையைப் பிடித்துக் கொண்டு நிற்கக் கூடிய உருவம். அதற்கு அடுத்து நின்ற சேனாபதி உருவம் அத்தனைத் தத்ரூபமாகச் செய்யப்பட்டதைக் காணும் போது, பாண்டம் செய்வதும் மிக நுண்ணுய கலை என்பதையும் அந்தக் காலத்திலேயே அது எவ்வளவு சிறப்புடன் இருந்திருக்கிறது என்பதையும் உணர முடிந்தது. இந்தப் பேழைகளுக்குப் பின்னால் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களில் சில காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

இந்தக் கூடாரத்தின் ஒரு ஓரத்தில், வீரர்களின் ஆளுயரச் சிற்பங்கள் (நகல்கள்) வைக்கப்பட்டு இருந்தன. அதன் அருகே சென்று அவர்கள் மத்தியில் நின்று படம் எடுத்துக் கொள்ளும் வசதிகள் செய்து வைத்திருந்தனர். 10 யுவான் கொடுத்து நாம் அங்கு சென்றதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் படம் எடுத்துக் கொள்ளலாம்.

மூன்றாவது குழிக்கு அடுத்துச் சென்றோம். அப்போது, வரும் மாதங்களில் இன்னும் மூன்று குழிகள் திறக்கப்பட உள்ளதாகச் சொன்னார் வழிகாட்டி. அங்கு அத்தனை சிறப்பாக ஒன்றும் பார்ப்பதற்கு இல்லை. இந்தக் குழி தான் படையின் தலைமை இடமாக இருந்தது என்பதை இங்கு கிடைத்த உருவங்களைக் கொண்டு அனுமானித்திருக்கிறார்கள். குதிரைகளும் தேர்களும் இங்கு கிடைத்திருக்கின்றன.

பிறகு, இந்த இடத்தை முதன்முதலில் கண்டுபிடித்து அரசுக்குத் தெரிவித்த விவசாயி அன்று அங்கு இருப்பதால், நாம் சந்திக்கலாம் என்று பல முறை கூறி வந்த வழிகாட்டி, இறுதியில் அவரைச் சந்திக்க அழைத்துச் சென்றார். அவர் அங்கு எப்போதுமே இருப்பார் என்பதை நமக்குச் சொல்லாமல் நம்முடைய ஆர்வத்தை அதிகமாக்க வௌ;வேறு கதைகளைக் கூறியது, அங்கு சென்ற பின் தெரிந்து கொண்டோம். அங்கு 200 யுவானுக்கு விற்கும் புத்தகத்தை நாம் வாங்கினால், அதில் அவர் கையெழுத்திட்டுக் கொடுக்கிறார். இல்லையென்றால், நாம் அவரை மட்டுமே பார்த்துவிட்டு வரலாம். அங்கு நினைவுப் பொருட்கள் விற்கும் கடையும் இருந்தது. ஒவ்வொரு உருவமும் வௌ;வேறு மண்ணாலும் உலோகத்தாலும் செய்யப்பட்டு காட்சியில் இருந்தன. விலை கேட்டால் வாங்கக் கூடிய விலையாக இருக்கவில்லை. நான் சுற்றிச் சுற்றி வந்தததைப் பார்த்த வழிகாட்டி, "உனக்கு வேண்டிய உருவத்தை எடு.. நான் பாதி விலையில் பேசிக் கொடுக்கிறேன்" என்றதும் தான் புரிந்தது, அங்கு விற்கும் உருவங்களில் போடப்பட்டு இருக்கும் மதிப்பு மிகவும் அதிகம் என்று. நாங்கள் புத்தகத்தையும் வாங்கவில்லை. எந்தப் பொருளையும் வாங்கவில்லை. வழிகாட்டிக்கு இது ஏமாற்றமாக இருந்தது அவரது முகத்திலே தெரிந்தது.

அங்கிருந்து கிளம்பி ஆரம்பித்த இடத்திற்கே திரும்பினோம். அங்கே எதிரே இருந்த அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். அங்கே வெங்கலத்தால் ஆன இரு அழகிய தேர்கள் இருந்தன. இது நிஜத்தில் இருப்பதில் பாதி அளவானதாம். கண்ணாடிப் பேழைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நான்கு குதிரைகள் பூட்டிய அழகிய தேர் ஒரு பக்கம். இது போருக்குப் பயன்படுத்தக் கூடியது. மற்றொரு பக்கம் மூடியிட்ட தேர். அது மன்னரும் மனைவியரும் பயணிக்கக் கூடிய தேர் என்று தெரிந்து கொண்டோம்.

எல்லாவற்றையும் பார்த்து முடித்ததும் நுழைவாயில் வழியே வெளியே வந்தோம்.

அங்கு இருந்தப் பணியாளர் 5 உருவங்கள் கொண்ட பெட்டி 50 யுவான். வாங்கச் சொல்லிக் கேட்டார். வேண்டாம் என்ற போதும் வாங்குங்கள் வாங்குங்கள் என்று நச்சரித்ததால், 10 யுவான் என்றால் வாங்குகிறோம் என்று சும்மா சொன்னோம். சரி.. கொடுக்கிறேன் என்று சொன்னதும் ஆச்சரியமாக இருந்தது. பிறகு மூன்று பெட்டிகளை வாங்கிக் கொண்டு கிளம்பினோம். இதற்குள் பசி எடுக்க ஆரம்பித்ததால் எங்கு உண்ணலாம் என்று சுற்றும் முற்றும் பார்த்தோம். வெளிநாட்டுப் பயணிகளின் வசதி கருதி, அங்கு கே.எப்.சி மற்றும் சப்வே இருந்தததால், எங்களுக்கு உணவு கிட்டியது மகிழ்ச்சி கொடுத்தது. உணவினை வாங்கி உண்டு விட்டு கிளம்பிய போது, அருகே இருந்த இடத்தில் ஒரு பெரிய வெள்ளை நிற உருவச் சிலை இருந்ததைக் கண்டோம்;. அது தான் சின் ஷி ஹ_வாங் இன் உருவம். இங்கு தான் பேருந்துகள் மக்களை இறக்கிச் செல்கின்றன. நாங்கள் சந்து வழியாக வந்ததால் இந்த இடத்தை நாங்கள் பார்க்கவில்லை. அந்தச் சிலையைப் பார்த்து விட்டு சின் ஷி ஹ_வாங் இன் சமாதியைப் பார்க்கக் கிளம்பினோம். அங்கு ஏதும் சுவாரசியமாக இல்லை என்று சொன்ன போதும், சென்று பார்க்கலாமே என்று புறப்பட்டோம்.

பெரிய பரந்த வெளியில் இருந்த சமாதியைக் காண நாங்கள் தயாராக இருந்த போதும், அங்கு சென்று பார்த்ததும் தான் தெரிந்தது எவ்வளவு பெரிய இடத்தை வளைத்துப் போட்டு சமாதியை கட்ட ஏற்பாடு செய்திருந்தார் பேரரசர் என்பது புரிந்தது. மிதிவண்டி வாடகைக்கு எடுத்துச் சென்றாலே இதில் ஒரு பகுதியைக் காண முடியும் என்று புரிந்ததும், அப்படியே திரும்புவது நல்லது என்று வாசலோடு பார்ப்பதைப் பார்த்துவிட்டு திரும்பி விட்டோம்.

சீ'அன் பயணத்தில் லொங் டொங் பகுதிக்குச் சென்று வந்ததை வாழ்நாளில் மறக்கவே முடியாது அளவிற்கு பிரம்மாண்டமாக தன் சமாதியை அமைத்த பேரரசரின் சாதனைக்கு எத்தனை பேர் பாடுபட்டிருப்பார்கள் என்பதை யோசிக்கவும் வைக்கிறது. இந்தப் பயணம் எங்கள் மனதில் என்றென்றும் இருக்கும்.

Regards

Chitra


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040