• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[உலக மரப்பு செல்வம்]

சொர்க்க கோயில்  

பெய்ச்சிங்கில் சுற்றுலா செய்யும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்குமானால், பெருஞ்சுவர், அரண்மனை அருங்காட்சியகம், கோடை கால மாளிகை, சொர்க்க கோயில் ஆகிய இடங்களைக் கட்டாயம் காண வேண்டும். ஏனெனில், சீனாவின் பண்டை காலக் கட்டடங்களின் உயரிய கட்டுமானச் சிறப்பை அவை பிரதிபலிக்கின்றன. இவற்றில், சொர்க்க கோயில், சீனாவில் இதுவரை மிகவும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ள அளவில் மிகப் பெரிய வழிபாட்டுத் தலமாகும். அமோக அறுவடை பெறுவதற்காகவும், அமைதியாக வாழ்வதற்காகவும் சீனாவின் பண்டைக் கால பேரரசர்கள் ஆண்டுதோறும் இங்கு வழிபாடு செய்துவந்தனர். சீனாவின் பேரரசர், கடவுளின் மகன் என்ற நம்பிக்கை அப்போது பரவியிருந்தது. கடவுளின் மகன் என்ற முறையில் பேரரசர்கள் நாட்டை ஆட்சிபுரிந்து, மக்களைக் கட்டுப்படுத்திவந்தனர். கடவுளுக்கு வழிபாடு செய்யும் உரிமை பேரரசர்களுடைய சிறப்புரிமையாகிவிட்டது. பொது மக்களுக்கு இத்தகைய உரிமை கிடையவே கிடையாது.

கி.பி. 1420ஆம் ஆண்டில் சொர்க்க கோயில் கட்டப்பட்டது. மிங் மற்றும் சிங் வமிசக் காலங்களில் இரண்டு தலைமுறை பேரரசர்கள் கடவுளுக்கு வழிபாடு செய்த இடம் இது. பெய்ச்சிங்கில் பிரபல தடுக்கப்பட்ட நகரின் ( பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்தின்) தென் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சொர்க்க கோயிலின் பரப்பளவு, தடுக்கப்பட்ட நகரை விட 4 மடங்கு கூடுதலாகும். இச்சொர்க்க கோயிலின் தெற்கு முனையிலுள்ள சுவர், நில வடிவம் போல சதுரமானது. அதன் வடக்கு முனையிலுள்ள சுவரின் வடிவம், அரை வட்ட வடிவமானது. இது, வானத்தைக் குறிக்கின்றது. இத்தகைய வடிவமைவு, வானம் வட்டமானது, நிலம் சதுரமானது என்ற சீனப் பண்டைக் கால மக்களின் சிந்தனையைப் பிரதிபலித்துள்ளது. சொர்க்க கோயில், உள் பகுதியையும் வெளி பகுதியையும் கொண்டது. அதன் முக்கியக் கட்டடங்கள், உள் பகுதியின் மையப் பாதையின் தெற்கு முனையிலும், வடக்கு முனையிலும் அமைந்துள்ளன. தெற்கிலிருந்து வடக்கு வரை முறையே வட்டமான பலி பீடம், சொர்க்க அரண்மனையின் கருவூலம், அமோக அறுவடைக்கான பிரார்த்தனை பீடம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. வட்டமான பலி பீடமானது, மூன்று அடுக்குகளைக் கொண்ட கல்லினாலான ஒரு மேடையாகும். ஒவ்வொரு அடுக்கிலும் கல்லான வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வட்டமான மேடை, பேரரசர் வழிபாடு செய்த போது பயன்படுத்தப்பட்ட மைய இடமாகும். பொதுவாக, சீனச் சந்திர நாள்காட்டியின் படி, ஆண்டுதோறும் டிசெம்பர் 22ஆம் நாள் அதிகாலைக்கு முன்னர், பேரரசரின் தலைமையில் வழிபாடு நடைபெற்றது. அப்போது, சொர்க்க கோயிலுக்கு முன் பெரிய கூண்டு விளக்கு ஒன்று ( lantern ) தொங்கவிடப்பட்டது. அந்த லாந்தர் விளக்கினுள்ளே சுமார் ஒரு மீட்டர் உயரமுடைய மெழுகுவத்தி(candle) எரிந்துகொண்டே இருந்தது. வட்டமான பலி பீடத்திற்கு தென்கிழக்கு முனையில் சிறப்பு நறுமணத் தூப (சாம்பிராணி) அடுப்புகள் உள்ளன. கடவுளுக்கு வழிபாடு செய்த போது விலங்குகள், மணிக்கல் வகை, பட்டுத்துணி வகை முதலிய பலி பண்டங்களை எரிப்பதற்கு நறுமணத் தூப அடுப்புகள் பயன்படுத்தப்பட்டன. சாம்பிராணி வீசிய வண்ணம், மேளம் தட்டப்பட்ட சூழ்நிலையில் வழிபாடு நடைபெற்றது. வட்டமான பலி பீடத்திற்கு வடக்கே, சொர்க்க அரண்மனையின் கருவூலம் அமைந்துள்ளது. இது, ஒரு மாடி கொண்ட சிறிய வட்டமான அரண்மனையாகும். இதில் கடவுளுக்கு வழிபாடு செய்வதற்கான அட்டைப் பலகை வைக்கப்பட்டிருந்தது. வட்டமான சுவர், சொர்க்க அரண்மனையின் கருவூலத்தைச் சூழந்துள்ளது. இந்த வட்டமான சுவர், புகழ்பெற்ற எதிரொலிப்புச் சுவர் ஆகும். இந்த எதிரொலிப்புச் சுவர் விசித்திரமானது. யாராவது ஒருவர், இந்தச் சுவரின் மறு பக்கத்தில் நின்று பேசினால், இப்பக்கத்திலுள்ளவர் தெளிவாகக் கேட்க முடியும்.

சொர்க்க கோயிலில் மற்றொரு வழிபாட்டு கட்டடம, அமோக அறுவடைக்கான பிரார்த்தனை பீடம் ஆகும். 3 அடுக்கு மாடங்களைக் கொண்ட இவ்வட்டமான மண்டபம், வட்டமான அடித்தளத்தில் கட்டப்பட்டது. அமோக அறுவடைக்கான பிரார்த்தனை பீடம், அமோக அறுவடை பெறுவதற்காக பேரரசர் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வழிபாடு செய்யும் இடம். இதனால், அதன் கட்டடம், வேளாண் பண்பாட்டுடன் தொடர்புடையது. எடுத்துக்காட்டாக, மண்டபத்தில் 4 உயரமான தூண்கள் உள்ளன. அவை, வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் ஆகிய நான்கு பருவங்களைச் சித்திரிக்கின்றனவாம். சீனாவின் பண்டைக் கால மனிதர், ஒரு நாளை 12 நேரப் பகுதிகளாகப் ( 2 மணிகள் ஒரு பகுதி ) பிரித்திருந்தனர். இதனால், முதலாவது மாடி மாடத்தைத் தாங்கும் 12 தூண்கள், 12 நேரப் பகுதிகளைக் குறிக்கின்றன. நடுவிலுள்ள 12 தூண்கள், 12 மாதங்களைக் குறிக்கின்றன. அவற்றைச் சேர்த்து மொத்தம் 24 தூண்கள் உள்ளன. சீனச் சந்திர நாள்காட்டியின் படி, அவை 24 (solar terms)சூரியக் கதிர்களின் சின்னமாக உள்ளன.

சீனாவின் பண்டை காலக் தொழில் வல்லுநர்கள், சொர்க்க கோயிலின் கட்டுமானத்தில் ஈடிணையற்ற புத்தாற்றலை வெளிப்படுத்தினர். எடுத்துக்காட்டாக, கட்டடத்தின் நிலத்தில் பெரும் புதுமையைக் காணலாம். சீனாவில் பேரரசர்களின் அரண்மனையைக் கட்டும் போது, பொதுவாக மஞ்சள் நிறமுடைய பளபளக்கும் ஓடுகள் உள்ள கூரை போடப்பட்டது. இது, பேரரசர் ஆட்சியைக் குறிக்கின்றது. ஆனால், சொர்க்க கோயிலைக் கட்டியமைத்த தொழில் வல்லுநர்கள் வானின் நிறமான நீல நிறத்தை முக்கிய நிறமாகப் பயன்படுத்தினர். எடுத்துக்காட்டாக, எதிரொலிப்புச் சுவரின் உச்சி, சொர்க்க அரண்மனையின் கருவூலத்தின் உச்சி, அமோக அறுவடைக்கான பிரார்த்தனை பீடத்தின் உச்சி ஆகிய அனைத்திலும் நீல நிறமுடைய பளபளக்கும் ஓடுகள் பயன்பட்டன. 1998ஆம் ஆண்டில், சொர்க்க கோயில், உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ள அளவில் மிகப் பெரிய பண்டைக் கால வழிபாட்டுக் கட்டடமான சொர்க்க கோயில், தனிச்சிறப்பு வாய்ந்த கட்டமைப்பு, அழகான அலங்காரம் ஆகியவற்றினால் உலகில் புகழ்பெற்றுள்ளது. இது, சீனக் கட்டட வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பது மட்டுமல்ல, உலகக் கட்டடக் கலையிலும் மதிப்பிடற்கரிய மரபுச் செல்வம் ஆகும் என்று உலக மரபுச்செல்வுக் கமிட்டி மதிப்பீடு செய்துள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040