• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[உலக மரப்பு செல்வம்]

கம்பியுசியஸ் கோயில், கல்லறை, குடும்ப மாளிகை  

கம்பியுசியஸ் என்பவர், உலகில் மகத்தான தத்துவஞானிகளில் ஒருவர். சீனாவின் கம்பியுசியஸ் தத்துவத்தை அவர் தோற்றுவித்தார். அவருடைய நினைவாகக் கம்பியுசியஸ் கோயில், கம்பியுதியஸ் கல்லறை, கம்பியுசியஸ் மாளிகை என்று அவருடைய நினைவிடங்கள் அழைக்கப்படுகின்றன. அவை, கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் சீனப் பேரரசர்கள், கம்பியுசியஸையும் அவருடைய தத்துவத்தையும் விடா முயற்சியுடன் பரப்பிவந்ததன் அடையாளச் சின்னங்களாகும்.

கம்பியுசியஸ் கோயில், கல்லறை, குடும்ப மாளிகை ஆகியவை கம்பியுசியஸ் பிறந்த ஊரான சான்துங் மாநிலத்தின் சியுவு நகரில் அமைந்துள்ளன.

கம்பியுசியஸ் கோயில், சீனாவின் முதலாவது கோயில் என்று போற்றப்படுகிறது. அது, சீனாவில் கம்பியுசியஸுக்கு வழிபாடு செய்யும் மிகப் பெரிய இடம் ஆகும். கி.மு.478ஆம் ஆண்டில், அதாவது கம்பியுசியஸ் இயற்கை எய்திய அடுத்த ஆண்டில், லூ அரசு மன்னரின் கட்டளைக்கிணங்க, கம்பியுசியஸ் வசித்த வீடு கோயிலாக மாற்றியமைக்கப்பட்டன. அதில் கம்பியுசியஸ் அணிந்த உடை முதலிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் வழிபாடு செய்யப்பட்டுவந்தது. அப்போதைய கம்பியுசியஸ் கோயிலில் 3 அறைகள் மட்டுமே இருந்தன. பின்னர், கம்பியுசியஸ் துவக்கிவைத்த கம்பியுசியஸ் பண்பாடு, படிப்படியாக சீனாவின் பாரம்பரிய பண்பாடாக மாறிவிட்டது. கடந்த கால மன்னர்களின் கட்டளைகளுக்கிணங்க, கம்பியுசியஸ் கோயில் தொடர்ந்து விரிவாக்கப்பட்டதால் அது, மிக பெரிய அளவிலான கட்டடங்களாக மாறிவிட்டது. 18வது நூற்றாண்டின் துவக்கத்தில் சிங் வமிச மன்னர் யுங்சங்கின் கட்டளையின் படி, கம்பியுசியஸ் கோயில் மேலும் விரிவாக்கப்பட்டது. தற்போது மக்கள் காணும் கம்பியுசிஸ் கோயில் இது தான்.

கம்பியுசியஸ் கோயிலின் நீளம் தெற்கிலிருந்து வடக்காகச் சுமார் ஆயிரம் மீட்டர். அதன் பரப்பளவு சுமார் ஒரு லட்சம் சதுர மீட்டர். இக்கோயிலில் 500 அறைகள் உள்ளன. அதன் அளவு, தற்போதைய சீனாவில், பழம் பெரும் கட்டடங்களான பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்துக்கு அடுத்ததாக இரண்டாம் இடம் வகிக்கின்றது. அது சீனாவின் பண்டை காலத்திலான மாபெரும் கோயில் கட்டடத்தின் முன்மாதிரியாகப் போற்றப்பட்டுள்ளது.

கம்பியுசியஸ் கோயிலின் கட்டடத் தரம், நிலபிரபுத்துவச் சமுதாயத்தின் மிக உயரிய கட்டட வரையறையை, அதாவது, அரசக் குடும்ப அரண்மனையின் கட்டட வரையறையை எட்டியுள்ளது. அதன் முக்கிய கட்டடங்கள், தென் வடலாக மத்திய கோட்டில் அமைந்துள்ளன. இதர கட்டடங்கள் இடது மற்றும் வலது பக்கத்தில் வரிசையாக நிற்கின்றன. இக்கட்டடங்கள் ஒழுங்காகவும் கம்பீரமாகவும் காணப்படுகின்றன. கம்பியுசியஸ் கோயில், 9 வரிசை மண்டபங்களையும் 9 வரிசை முற்றங்களையும் கொண்டது. அதன் முக்கிய மண்டபம், தாசென் மண்டபம். அதில் 9 அறைகள் உள்ளன. 9 என்றால் ஒற்றைப்படை இலக்கத்தில் மிகப் பெரிய எண்ணாகும். சீனாவின் நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தில், ஒன்பது என்றால் மன்னர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய எண். குறிப்பாகக் கட்டடத்தில், மன்னர் தவிர, வேறு எவரும் இந்த எண்ணைப் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால், கொலை செய்யப்படுவார். ஆனால், கம்பியுசியஸ் கோயிலுக்கு இதிலிருந்து விதிவிலக்கு. கம்பியுசியஸின் முக்கிய மண்டபத்தின் முன் வாசலில், 5 வரிசைக் கதவுகள் உள்ளன. நிலபிரபுத்துவ மரியாதை விதிக்கிணங்க, பேரரசர் குடும்பக் கட்டடங்களுக்குள் 5 வரிசைக் கதவுகள் இருக்கலாம். பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்தில் 5 வரிசைக் கதவுகள் உள்ளன. கம்பியுசியஸ் கோயிலிலும் 5 வரிசைக் கதவுகள் உள்ளன. மன்னர் மட்டும் அனுபவிக்கக் கூடிய மரியாதை சலுகை அதற்கு வழங்கப்பட்டுள்ளது.

கம்பியுசியஸ் முக்கிய கட்டடமான தாசென் மண்டபத்தின் உயரம் சுமார் 30 மீட்டர். அதன் அகலம் கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 50 மீட்டர். மண்டபத்தின் உச்சியில் பொன்னிற ஓடுகள் ஒளிவீசி, கம்பீரமாகக் காணப்படுகின்றன. இதை பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்திலுள்ள தைஹொ மண்டபத்துடன் ஒப்பிடலாம். சீனாவில் தொன்மை வாய்ந்த மூன்று முக்கிய மண்டபங்களில் இதுவும் ஒன்று எனப் போற்றப்படுகிறது. தாசென் மண்டபத்திற்கு முன் வாசலில் அமைந்துள்ள, டிராகன் உருவச் சிற்பங்களுடன் கூடிய 10 கல் தூண்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அவை, 6 மீட்டர் உயரமும், சுமார் ஒரு மீட்டர் விட்டமும் கொண்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்டவை. அவை கம்பீரமாகவும் நேர்த்தியாகவும் காணப்படுகின்றன. இந்த 10 தூண்களில் செதுக்கப்பட்ட டிராகன் உருவங்கள் வெவ்வேறானவை. அவை மிகவும் அழகானவை. அவை, சீனாவின் பண்டை காலக் கல் சிற்பக் கலையில் காண்பதற்கு அரியவை. பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள டிராகன் தூண்களைக் கூட அவற்றுடன் ஒப்பிட முடியாது.

தவிர, கம்பியுசியஸ் கோயிலில், சீனாவின் பல்வேறு வமிசக் காலங்களிலுள்ள ஈராயிரத்துக்கும் அதிகமான கல் வெட்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை, சீனாவின் மாபெரும் கல் வெட்டுக்களில் ஒன்றாகத் திகழ்கின்றன. இவற்றில் ஐம்பதுக்கும் அதிகமான மன்னர்களின் எழுத்துக்களுடன் கூடிய கல் வெட்டுக்கள் உள்ளன. நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தில் கம்பியுசியஸ் உயர்ந்த தகுநிலையை இது முழுமையாக எடுத்துக்காட்டுகிறது.

கம்பியுசியஸ் குடும்ப மாளிகை, கம்பியுசியஸ் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. கம்பியுசியஸ் மூதாதையர் வசித்த இடம் இது. சீன வரலாற்றில் மிங் மற்றும் சிங் வமிசக் காலத்தில் அதாவது 1368ஆம் ஆண்டு முதல் 1911ஆம் ஆண்டு வரையான மன்னர்களின் குடும்ப அரண்மனைகளுக்கு அடுத்ததாக மிகப் பெரிய குடும்ப மாளிகை இது.

கம்பியுசியஸ் குடும்ப மாளிகை, கி.பி 12வது நூற்றாண்டு முதல் 13வது நூற்றாண்டு வரையான காலத்தில் கட்டப்பட்டது. இது, நிலப்பிரபுத்துவ உயர் குடிமகனான நிலவுரிமையாளரின் பண்ணைக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கியது. அதன் நிலப்பரப்பு, சுமார் 50 ஆயிரம் சதுர மீட்டர். அதில் சுமார் 500 அறைகளும் மண்டபங்களும் உள்ளன. கம்பியுசியஸ் குடும்ப மாளிகையின் கட்டமைப்பு தனிச்சிறப்பு மிக்கது. அதன் முன் பகுதி, அலுவல் நடைபெறும் இடம். பிற்பகுதி, வாழும் இடம். மண்டபத்தின் கட்டடக் கட்டமைப்பு, மிங் மற்றும் சிங் வமிசக் காலங்களின் அலுவலகக் கட்டடப் பாணியில் அமைந்துள்ளது. கம்பியுசியஸ் குடும்ப மாளிகையில், ஏராளமான மதிப்புள்ள வரலாற்றுப் பதிவேடுகளும் கடந்த கால ஆடைகள், உடுப்புகள், பயன்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட வரலாற்று மதிப்பு மிக்க தொல் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

கம்பியுசியஸ் கல்லறை, கம்பியுசியஸும் அவர்தம் குடும்பத்தினர்களும் மட்டும் பயன்படுத்தப்பட கூடிய கல்லறையாகும். தற்போதைய உலகில், மிக நீண்ட வரலாறுடைய, அளவில் மிகப் பெரிய குடும்பக் கல்லறை இது. கடந்த 2500 ஆண்டுகளில் கம்பியுசியஸ் மூதாதையருடைய பூதவுடல்கள் இக்கல்லறையில் புதைக்கப்பட்டன. இக்கல்லறையின் பரப்பளவு ஏறக்குறைய 2 சதுரக் கிலோமீட்டர். கம்பியுசியஸின் மூதாதையர் கல்லறைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது. இக்கல்லறையில் ஹென் வமிச காலம் முதல், அதாவது கி.மு. 206ஆம் ஆண்டு முதல் கி.பி. 220ஆம் ஆண்டு வரையிலான 5000க்கும் அதிகமான கல்லறைக் கல் வெட்டுகளும், வாசகங்களுடன் கூடிய கல் வெட்டுகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

சீன வரலாற்றில் அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சியிலும், ஈமச் சடங்கின் பழக்க வழக்கங்களின் மாற்றத்திலும் கம்பியுசியஸ் கல்லறை, மிகவும் முக்கியமான பங்கை ஆற்றியது.

கம்பியுசியஸ் கோயில், கம்பியுசியஸ் கல்லறை, கம்பியுசியஸ் குடும்ப மாளிகை ஆகியவை உலகில் புகழ்பெற்ற, வளமிக்க பண்பாட்டு மரபுச்செல்வங்களாகும். இது மட்டுமல்ல, ஏராளமான இயற்கை மரபுச்செல்வங்களையும் அவை கொண்டுள்ளன. அவற்றில் இன்னமும் வளர்ந்துகொண்டே இருக்கும் 17000க்கும் அதிகமான பழங்கால மரங்கள், அவற்றின் வளர்ச்சி வரலாற்றை நிலைநாட்டும் அதே வேளையில் பண்டைக் கால காலநிலவியலையும், உயிரியலையும் ஆராய்வதற்கு உதவுகின்றன.

கம்பியுசியஸ் கோயில், கல்லறை, குடும்ப மாளிகை ஆகியவை, அவற்றின் மிகுந்த பண்பாட்டுச் சேமிப்பு, நீண்ட வரலாறு, பிரமாண்டமான அளவு, நிறைய தொல் பொருட்கள் ஆகியவற்றினாலும் மதிப்புள்ள அறிவியல் மற்றும் கலைச்சிறப்பாலும் உலகில் புகழ்பெற்றுள்ளன. 1994ஆம் ஆண்டு, அவற்றை யுனெஸ்கோ, உலகப் பண்பாட்டு மரபுச்செல்வப் பட்டியலில் சேர்த்துள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040