• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[உலக மரப்பு செல்வம்]

துன்ஹுவாங் முகௌக் கல்குகை

இதுவரை உலகளாவிய நிலையில் அளவில் மிகப் பெரிய, மிகவும் முழுமையாகப் பேணப்பட்டுள்ள புத்த மதக் கலைக்கருவூலமாக வட மேற்கு சீனாவின் துன்ஹுவாங் முகௌக் கல்குகை திகழ்கின்றது. 1987ஆம் ஆண்டு, உலக மரபுச்செல்வப் பட்டியலில் முகௌக் கல்குகை சேர்க்கப்பட்டது. புத்தர் உருவச்சிலைகள், சுவர் ஓவியங்கள் ஆகியவற்றினால், இக்குகை உலகப் புகழ்பெற்றுள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய புத்த மதக் கலையை இது பிரதிபலித்துள்ளது என்று உலக மரபுச்செல்வக் கமிட்டி மதிப்பீடு செய்துள்ளது.

வட மேற்கு சீனாவின் கான்சு மாநிலத்து துன்ஹுவாங் நகரின் புறநகரில் மிங்சா மலை ஒன்று உள்ளது. இம்மலையின் கிழக்கு அடிவாரத்தில் பிரிந்துவிட்ட மலைப் பகுதியில் தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் பாதையில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் ஏராளமான குகைகள் செதுக்கபட்டுள்ளன. இக்குகைகள், மேல் பகுதி முதல் கீழ் பகுதி வரை 5 தட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒழுங்கான முறையில் செதுக்கப்பட்ட இக்குகைகள் மிகவும் கம்பீரமானவை. இதுவே, உலகில் புகழ்பெற்ற துன்ஹுவாங் முகௌக் கல்குகை.

கி.பி 366ஆம் ஆண்டில் இக்கல்குகை செதுக்கப்படத் துவங்கியது. இதற்குப் பிந்திய பல வமிசக் காலத்தின் வளர்ச்சியுடன் குகைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவந்துள்ளன. 7ஆம் நூற்றாண்டின் தாங் வமிசக் காலத்தில் முகௌக் கல்குகையில் புத்தர் உருவச்சிலைகள் இருக்கும் குகைகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதனால் முகௌக் கல்குகை ஆயிரம் புத்தர் சிற்பக் குகை என்றும் அழைக்கப்படுகின்றது.

பல்வேறு வமிச காலங்களில் மக்கள், குகைகளைச் செதுக்கிய போது, குகைக்குள் அதிகமான புத்தர் உருவச்சிலைகளைச் செதுக்கியதோடு, ஏராளமான சுவர் ஓவியங்களையும் தீட்டினர்.

கீழை மற்றும் மேலை நாட்டுத் தொடர்பை இணைக்கும் பட்டுப்பாதையின் முக்கிய இடத்தில் துன்ஹுவாங் முகௌக் கல்குகை அமைந்துள்ளதால், கீழை மற்றும் மேலை நாட்டு மதம், பண்பாடு, அறிவு ஆகியவை பரிமாறிக்கொள்ளும் இடமாகவும் இது திகழ்ந்தது. வெளிநாடுகளின் கலையும் சீனத் தேசத்தின் கலையும் இணையும் இடம் இது. வேறுபட்ட கலைப் பாணியினால், இந்தக் கலைக்கருவூலம் மேலும் செழுமைப்பட்டுள்ளது.

(வரலாற்று மாற்றம்)இயற்கை மற்றும் செயற்கை சீர்குலைக்குப் பின், இது வரை, முகௌக் கற்குகையில் சுமார் 500 குகைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. சுமார் 50 ஆயிரம் சதுரக் கிலோமீட்டர் பரப்பளவுடைய சுவர் ஓவியங்களும் ஈராயிரத்துக்கும் அதிகமான புத்தர் உருவச் சிலைகளும் பேணிக்காக்கப்படுகின்றன. இந்தப் புத்தர் உருவச்சிலைகள் வேறுபட்ட வடிவில் காணப்படுகின்றன. ஆடைகளும் உருவங்களும் வேறுபடுகின்றன. அவை, வேறுபட்ட காலங்களின் தனிச்சிறப்பை வெளிப்படுத்தியுள்ளன. இக்குகையிலுள்ள சுவர் ஓவியங்களனைத்தையும் இணைத்தால் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவுக்கு வரும்.

       

இச்சுவர் ஓவியங்களில் புத்த மத அம்சம் முக்கிய இடம் வகிக்கின்றது. எடுத்துக்காட்டாக, வெவ்வேறான புத்தர்கள், கடவுள்கள், பேரரசர்கள் ஆகியோரை வர்ணிக்கும் ஓவியங்கள், புத்த மத நூலில் இடம்பெறும் படக்கதை புத்தகங்கள், இந்தியா, மத்திய ஆசியா மற்றும் சீனாவில் புத்த மதம் பற்றிய கட்டுக்கதைகளை வரலாற்றுப் பிரமுகர்களுடன் இணைத்திருக்கும் புத்த மத வரலாற்று ஓவியங்கள் முதலியவற்றை இந்த ஓவியங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். தவிர, வேறுபட்ட காலங்களிலான சுவர் ஓவியங்கள், அக்காலத்திலான பல்வேறு தேசிய இன மக்கள் மற்றும் வேறுபட்ட சமூகத்தினரின் வாழ்க்கை, உடைகள், தொன்மை வாய்ந்த கட்டடங்கள், இசை, நடனம், குடிக்கரணம் ஆகியவற்றை பிரதிப்பலித்துள்ளன. சீன வெளிநாட்டுப் பண்பாட்டுத் தொடர்பு பற்றிய வரலாற்று உண்மையையும் நிரூபித்துள்ளன. இதனால், துன்ஹுவாங் சுவர் ஓவியங்களைச் சுவரில் நூலகம் என்று மேலை நாட்டு அறிஞர்கள் அழைக்கின்றனர்.

துன்ஹுவாங் முகௌக் கல்குகையில், சீனாவின் அண்மை கால வரலாற்றில் மிகவும் துயரமான, மிக அதிக அளவிலான தொல் பொருள் இழப்பு நிகழ்ந்தது.

1900ஆம் ஆண்டில், முகௌக் கல்குகையில் திருமறை நூல்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள ரகசிய அறையொன்று எதிர்பாராதவாறு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், இந்த ரகசிய அறை, திருமறை பொருள் சேமிக்கும் குகை என அழைக்கப்பட்டது. நீளமும் அகலமும் முறையே 3 மீட்டரைக் கொண்ட இச்சிறிய குகையில், திருமறை நூல், ஆவணம், சித்திரதையல், ஓவியம், புத்தர் சிற்பத்துடன் கூடிய துணி பதாகை உள்ளிட்ட அரிய தொல் பொருட்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது. கி.பி 4வது நூற்றாண்டு முதல் 11வது நூற்றாண்டு வரையிலான இத்தொல் பொருட்களின் உள்ளடக்கம், சீனா, மத்திய ஆசியா, தெற்காசியா, ஐரோப்பா ஆகியவற்றின் வரலாறு, புவியியல், அரசியல், தேசிய இனம், ராணுவம், மொழி எழுத்துக்கள், கலை இலக்கியம், மதம், மருத்துவம், மருந்து அறிவியல் தொழில் நுட்பம் உட்பட, ஏறக்குறைய அனைத்து துறைகளுடன் தொடர்புடையது. சீனாவின் பண்டை காலக் கலைக் களஞ்சியம் என்று அது போற்றப்பட்டுள்ளது.

திருமறை நூல் குகை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பல்வேறு நாடுகளின் ஆய்வாளர்கள் பலர், அங்கு சென்று, குறுகிய 20 ஆண்டுகளுக்குள், துன்ஹுவாங்கிலிருந்து சுமார் 40 ஆயிரம் திருமறை நூல்களையும் மதிப்புள்ள சுவர் ஓவியங்கள் மற்றும் புத்தர் சிற்பங்கள் பலவற்றையும் திருடிவிட்டனர். இதன் விளைவாக, முகௌக் கல்குகைக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டது. தற்போது, பிரிட்டன், பிரான்சு, ரஷியா, இந்தியா, ஜெர்மனி, டென்மார்க், சுவீடன், தென் கொரியா, பின்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தன்ஹுவாங் தொல் பொருட்கள் சேமித்துவைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்தச் சேமிப்புத் தொகை, திருமறை பொருள் குகையிலுள்ள தொல் பொருட்களின் மொத்த தொகையில் மூன்றில் இரண்டு பகுதியாகும்.

திருமறை பொருள் குகை கண்டுபிடிக்கப்பட்டதுடன், சீன அறிஞர்கள் பலர், தன்ஹுவாங் ஆவணம் பற்றி ஆராயத் துவங்கினர். 1910ல், சீனாவில் தன்ஹுவாங் ஆவண ஆராய்ச்சி பற்றிய முதல் தொகுதி நூல் வெளியிடப்பட்டது. இதனால், உலகில் பிரபலக் கல்வியியல் என்று கருதப்படும் தன்ஹுவாங்வியல் உருவாயிற்று. கடந்த பல பத்து ஆண்டுகளுக்கு மேலாக, தன்ஹுவாங் கலை மீது பல்வேறு நாட்டு அறிஞர்கள் பெரும் அக்கறை கொண்டு, ஆராய்ந்துவருகின்றனர். தன்ஹுவாங்வியல் ஆராய்ச்சியில் சீன அறிஞர்கள் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

தன்ஹுவாங் முகௌக் கல்குகை சீனப் பண்பாட்டின் மதிப்பிற்கரிய செல்வம் என்ற கருத்தைக் கொண்டு, அதன் பாதுகாப்பில் சீன அரசு எப்பொழுதும் கவனம் செலுத்திவருகின்றது. முகௌக் குகையைப் பார்வையிட மென்மேலும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் சீனாவுக்கு வருவதால், தொல் பொருட்களைப் பாதுகாக்க, முகௌக் குகைக்கு எதிரேயள்ள சான்வெய் மலையின் அடிவாரத்தில் தன்ஹுவாங் கலைக் காட்சியகத்தை சீன அரசு நிறுவியுள்ளது. பயணிகள் பார்வையிடுவதற்கென செய்யப்பட்ட செயற்கை முகௌக் கல்குகை, உண்மை முகௌக் கல்குகையைப் போன்றது.

எண்ணியல் கணிணி முகௌக் குகையை உருவாக்குவதற்கு சீன அரசு அண்மையில் 20 கோடி யுவான் ஒதுக்கி வைத்துள்ளது. இந்தப் போலியான குகையைப் பார்வையிடும் போது, உண்மையான முகௌக் குகையில் நுழைவது போன்ற உணர்வு பயணிகளுக்கு ஏற்படலாம். தவிர, இக்குகையில் சுற்றிப்பார்வையிடும் போது, இதிலுள்ள கட்டடங்கள், புத்த மதத்தினரின் வண்ண உருவச் சிலைகள், 4 சுவர்களிலுமுள்ள ஓவியங்கள் உள்ளிட்ட அனைத்து கலைப்பொருட்களையும் தெளிவாகக் காணலாம். போலியான முகௌக் குகை கட்டியமைக்கப்பட்டதால், சுவர் ஓவியங்கள் பாதிக்கப்படாமல் பாதுகாப்புடன் இருக்கும். அத்துடன் தன்ஹுவாங் பண்பாட்டுச் சொத்துக்களை நன்கு பாதுகாக்க முடியும். முகௌக் குகையிலுள்ள தொல் பொருட்களும் பண்பாடும் நீண்ட காலம் நீடிந்து நிலைத்திருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040