• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[உலக மரப்பு செல்வம்]

போத்தலா மாளிகை

சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான லாசா மையப்பகுதியிலுள்ள ஹொங்சான் மலையில் போத்தலா மாளிகை அமைந்துள்ளது. மலைச் சரிவில் கட்டப்பட்ட இக்கம்பீரமான கட்டடம், உலக உச்சியின் முத்து என அழைக்கப்படுகின்றது. திபெத் கட்டடக் கலையின் தலைசிறந்த சின்னம் இது. சீனாவின் புகழ்பெற்ற பண்டைக் காலக் கட்டடங்களில் ஒன்றாகவும் இது திகழ்கின்றது.

போத்தலா மாளிகையானது, திபெத் வரலாற்றில் தலாய் லாமாக்கள் வசித்து, அரசியல் மற்றும் மத நடவடிக்கை நடத்தும் இடமும் வசிக்கும் இல்லமும் ஆகும். திபெத்தில் இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ள அதிக மாடிகளுடன் கூடிய தொன்மை வாய்ந்த மிகப் பெரிய கட்டடம் இது. வரலாற்றுப் பதிவேட்டின் படி, கி.பி 7வது நூற்றாண்டில், அதாவது, துபென் மன்னராட்சிக் காலத்தில் போத்தலா மாளிக்கை கட்டப்பட்டது. ஹொங்சான் மாளிகை என அப்போது அழைக்கப்பட்டது. இம்மாளிகை மிகவும் பெரியது. அதைச் சுற்றிலும் அரண்களாக 3 நகரச் சுவர்கள் கட்டப்பட்டன. உள்ளே ஆயிரம் அறைகள் உள்ளன. அது, துபென் மன்னராட்சியின் அரசியல் மையமாக இருந்தது. கி.பி. 9வது நூற்றாண்டில் துபென் மன்னராட்சி கலைந்தது. திபெத், நீண்ட காலப் போரில் சிக்கியதால், ஹொங்சான் போத்தலா மாளிகை படிப்படியாக பயன்படாமல் இருந்தது.

கி.பி. 1645ஆம் ஆண்டில் 5வது தலாய் லாமாவின் கட்டளைக்கிணங்க, போத்தல மாளிகையின் சீரமைப்புப் பணி துவங்கியது. அதன் முக்கிய கட்டுமானப் பணி சுமார் 50 ஆண்டு காலம் நீடித்தது. பின்னர், படிப்படியாக விரிவாக்கப்படுவதற்குச் சுமார் 300 ஆண்டுகள் ஆயின. 13 மாடிகளைக் கொண்ட போத்தலா மாளிக்கை 110 மீட்டர் உயரமுடையது. இக்கட்டடத்தின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்ட முக்கிய மூலப் பொருட்கள் கல்லும் வெட்டு மரங்களும் ஆகும். இம்மாளிகையின் சுவர்களனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டன. மிகவும் தடியான இடத்தின் அளவு 5 மீட்டர். அத்துடன், அதிக மாடிகளுடன் கூடிய இப்பண்டை காலக் கட்டடத்தை இடி தாக்காமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதனால், கடந்த பல நூறு ஆண்டுகளில் இடி இடித்த போதிலும், நில நடுக்கம் நிகழ்ந்த போதிலும் போத்தலா மாளிகை பாதிக்கப்படவில்லை. போத்தலா மாளிக்கையின் கிழக்கு பகுதியிலுள்ள பைய்குங் மாளிகை, (தலாய் லாமா வசிக்கும் இடம்), மத்திய பகுதியிலுள்ள ஹொங்குங் மாளிகை,(புத்தர் மத மண்டபமும் தலாய் லாமாக்களின் சடங்குகளைக் கொண்ட கோபுரங்களும்), மேற்கு பகுதியிலுள்ள புத்தர்கள் வீடு ஆகியவை போத்தலா மாளிகையின் முக்கிய பகுதிகளாகும். புத்த மதச் சடங்கு நடைபெறும் போது, ஹொங்குங் மாளிகையின் முன் பக்கத்திலுள்ள உயரமான வெண்ணிறச் சுவரில் மாபெரும் புத்தர் உருவப் படங்கள் தொங்கவிடப்படுவது வழக்கம். பல கட்டடங்கள் வேறுபட்ட காலங்களில் கட்டப்பட்ட போதிலும், மலை மற்றும் நில அமைப்பிற்கு ஏற்ப உரிய முறையில் கட்டப்பட்டதால் அவை மிகவும் இசைவாக ஒன்றிணைந்து, மிகவும் கம்பீரமாகக் காணப்படுகின்றன. இக்கட்டடங்களில் உயர்ந்த கலை அழகு பிரதிபலிக்கிறது. அவற்றின் முக்கிய பகுதியாக விளங்கும் ஹொங்குங் மாளிகை, கடந்த கால தலாய் லாமாக்களின் சடங்குகளைக் கொண்ட கோபுரங்களும் பல்வகை புத்த மத மண்டபங்களும் ஆகும். இதில், 5வது தலாய்லாமா ரூஸாசியாசூவின் சடங்கைக் கொண்ட கோபுரம் குறிப்பிடத் தக்கது. சுமார் 15 மீட்டர் உயரமுடைய இக்கோபுரத்தின் அடிப்பகுதி சதுர வடிவமுடையது. உச்சி வட்ட வடிவமானது. அது, மேல் பகுதி, நடுப்பகுதி மற்றும் கீழ்ப்பகுதிகளைக் கொண்டது. இக்கோபுரத்தின் நடுப்பகுதியில், நறு மணம் வீசும் பொருட்கள், செந்நிற மலர்கள் முதலியவற்றுடன், 5வது தலாய் லாமாவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. மொத்தம் 3724 கிலோகிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டது. அத்துடன், வேறுபட்ட வகைகளைச் சேர்ந்த 15000க்கும் மேற்பட்ட மதிப்பு மிக்க வைரங்கள், மாணிக்கங்கள் மற்றும் மரகதக்கற்கள், மணிக்கல்கள், முத்து, பவழங்கள் ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன. கோபுரத்தில் புத்த மதத்தவர்கள் பயன்படுத்தும் பல்வகை மதக் கருவிகளும், பலி பாண்டங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேற்கு பகுதியிலுள்ள பெரிய மண்டபம், 5வது தலாய் லாமாவின் சடங்கு நிகழும் மண்டபம். ஹொங்குங் மாளிகையில் மிகப் பெரிய மண்டபம் இது. சுமார் 6 மீட்டர் உயரமுடைய 48 பெரிய தூண்களால் உருவாக்கப்பட்டது. இம்மாளிகையில், வெட்டு மரங்களில் செதுக்கப்பட்ட புத்தர் உருவச் சிலைகளும் சிங்கம், யானை உள்ளிட்ட பல்வகை விலங்குகளின் உருவச்சிலைகளும் அதிக அளவில் உள்ளன. 17வது நூற்றாண்டில் போத்தல மாளிகை கட்டப்பட்ட போதும் அதற்குப் பின்பு விரிவாக்கப்பட்ட போதும் திபெத் வட்டாரத்தின் தலை சிறந்த ஓவியர்கள், நுட்பமான அழகான சுவர் ஓவியங்களைத் தீட்டினர். பெரிய மற்றும் சிறிய மண்டபங்கள், இடைவழி உள்ளிட்ட எல்லா இடங்களிலும் சுவர் ஓவியங்களைக் காணலாம். இந்த ஓவியங்கள் வெவ்வேறு கருப்பொருட்களைச் சித்திரிக்கின்றன. இவற்றில் வரலாற்றுப் பிரமுகர்கள், வரலாற்றுக் கதைகள், புத்த மதக் கதைகள் ஆகியவற்றை எடுத்துக்கூறும் ஓவியங்களும், கட்டடம், பழக்க வழக்கம், உடல் பயிற்சி, பொழுதுபோக்கு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. அவை, போத்தல மாளிகையின் மதிப்பு மிக்க கலைப் பொருட்கள்.

தவிர, போத்தல மாளிகையில், 17வது நூற்றாண்டுக்குப் பிந்திய சுமார் 10 ஆயிரம் ஓவியச் சுருள்களும் ஏராளமான கல் சிற்பங்கள், மரச் சிற்பங்கள், மண் சிற்பங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்களும் சில வரலாற்றுத் தொல் பொருட்களும் சேகரித்துவைக்கப்பட்டுள்ளன. அன்றி, திபெத் கம்பளி, புத்த மதப் பதாகை, பீங்கான், மணிக்கல் முதலிய திபெத் பாரம்பரிய கலைப் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. அவை உயர்ந்த கலை மதிப்புடையவை. இது மட்டுமல்ல, கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, திபெத், ஹென் முதலிய தேசிய இனங்களுக்கிடையிலான நட்புறவையும் பண்பாட்டுப் பரிமாற்றதையும் இது எடுத்துக்காட்டுகிறது. உலக உச்சியின் முத்து என்று அழைக்கப்படும் போத்தல மாளிகையிலுள்ள மண்டபங்களின் அமைப்பு, கட்டமைப்பு, உலோகத்தை உருக்குவது, ஓவியம், செதுக்கும் கலை ஆகியவை உலக புகழ்பெற்றவை. திபெத் இன மக்களை முக்கியமாகக் கொண்டு, ஹென், மங்கோலிய மற்றும் மன் இனங்களைச் சேர்ந்த தொழில் நுட்ப வல்லுநர்களின் உயர் நிலைத் தொழில் நுட்பத்தையும், சிறந்த திபெத் இனக் கட்டக் கலையையும் இது வெளிப்படுத்தியுள்ளது. 1994ஆம் ஆண்டு, போத்தல மாளிகை, வரலாறு விட்டுச்சென்ற பண்பாட்டு மரபுச் செல்வம் என்று யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு, உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.


1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040