|
![]() |
பழம்பெரும் பிங்யௌ நகரம்
வட சீனாவின் சான்சி மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் பிங்யௌ நகரம், 1997ஆம் ஆண்டு, உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த நகரம், சீனாவில் மிகவும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ள பண்டைக்கால நகரம். சீன வரலாற்றில் பண்பாடு, சமூகம், பொருளாதாரம், மதம் ஆகியவற்றின் முழுமையான வளர்ச்சியை இது மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறது.
கி.மு. 9வது நூற்றாண்டில், இந்நகரம் சதுரமான வடிவில் கட்டப்பட்டது. அதன் பரப்பளவு 2.25 சதுர கிலோமீட்டர் மட்டுமே. இந்தப் பழைய நகரில் இன்று காணப்படும் முக்கிய கட்டடங்கள், சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டவை. நகரச் சுவர், வீதி, குடியிருப்புக்கள், கடைவீதி, கோயில் ஆகியவை அப்படியே மாறாமல் உள்ளன. பல்லாயிரம் ஆண்டு கால வளர்ச்சியில் சீன ஹென் இன மக்களின் பாரம்பரிய பண்பாட்டுச் சிந்தனையை இவை வெளிப்படுத்துகின்றன. சீனாவின் மிங் மற்றும் சிங் வமிசக் காலத்தில் அதாவது 1368ஆம் ஆண்டு முதல் 1911ஆம் ஆண்டு வரையிலான கட்டடக் கலையின் வரலாற்று அருங்காட்சியகமாக இது திகழ்கின்றது.
2800 ஆண்டுகளுக்கு முன் பண்டைய பிங்யௌ நகரச் சுவர் கட்டப்பட்டது. அப்போது நகரச் சுவர் மண்ணால் கட்டப்பட்டது. 1370ஆம் ஆண்டில், மண் சுவருக்குப் பதிலாக செங்கல், கல் ஆகியவற்றால் கட்டப்பட்ட நகரச் சுவர் தோன்றியது. அத்துடன், அது தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டுவந்தது. இதுவரையிலும் பழைய நகரச் சுவரின் அக்கால நிலைமை பராமரிக்கப்பட்டுவருகின்றது.
ஆமை வடிவத்திலான நகரச் சுவரின் நீளம் 6000 மீட்டருக்கும் அதிகம். அதன் உயரம் 12 மீட்டர். 6 நுழைவாய்கள் உள்ளன. தெற்கிற்கும் வடக்கிற்கும் தலா ஒரு நுழைவாயில். கிழக்கிற்கும் மேற்கிற்கும் தலா இரண்டு. இந்நகரின் தெற்கிலுள்ள வாயிற்கதவு, ஆமையின் தலை என்றும், கதவுக்கு வெளியேயுள்ள இரண்டு கிணறுகள் ஆமையின் இரண்டு விழிகள் என்றும் கருதப்படுகின்றன. வடக்கிலுள்ள கதவு, ஆமையின் வால் என்று அழைக்கப்படுகின்றது. நகரின் மிகவும் தாழ்வான இடம் இது. நகரில் வடிகால் நீர் இவ்விடத்திலிருந்தே வெளியே செல்லுகின்றது. சீனாவின் பாரம்பரிய பண்பாட்டில், ஆமை என்றால் நீண்ட ஆயுளின் சின்னம் என்று பொருள்படுகின்றது. ஆமை கடவுளின் சக்தி மூலம், பழம்பெரும் பிங்யௌ நகரை, கல் போல உறுதியாகவும், ஆமை போல நிரந்தரமாகவும் இருக்கச் செய்யும் பண்டை காலச் சீனர்களின் விருப்பத்தை ஆமை வடிவ நகரச் சுவர் பிரதிபலிக்கிறது.
இதர இடங்களுடன் தொடர்பு கொள்ளாத இந்நகரில், நகர மையப் பகுதியில் அமைந்துள்ள தெற்கிலிருந்து வடக்கிற்குச் செல்லும் நேரடியான வீதி, நகரப்பகுதியின் மத்திய கோடாக விளங்குகின்றது. பாதைகளும் வீதிகளும் குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்றன. நகர அமைப்பு ஒழுங்காகக் காணப்படுகின்றது.
பண்டைய பிங்யௌ நகரில், மக்கள் வீடுகளனைத்தும் சாம்பல் நிறச் செங்கலால் கட்டப்பட்டன. இத்தகைய வீடு ஸ்ஹயுயெ என்று அழைக்கப்படுகின்றது. அதாவது, நான்கு பக்கமும் அறைகளும் நடுவில் முற்றமும் கொண்ட கட்டடம் இது. நடுவில் தெளிவான கோடு உள்ளது. இடது பக்கமும் வலது பக்கமும் சம நிலையில் உள்ளது. ஒவ்வொரு முற்றமும் ஒரு சுவரால் சூழப்பட்டுள்ளது. சுவரின் உயரம் 7 அல்லது 8 மீட்டர். பண்டைய பிங்யௌ மக்கள் வீடுகளின் முக்கிய அறை, வட மேற்கு சீனாவின் குகை வீடு வடிவத்தைப் பிரதிபலிக்கிறது. கட்டடத்திலுள்ள மரச் சிற்பங்கள், செங்கல் சிற்பம், ஜன்னல் அழகு செய்வதற்கான காகிதக் கத்தரிப்பு ஆகியவை அனைத்திலும் கிராம மணம் கமழுகின்றது. இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ள நான்காயிரத்துக்கும் அதிகமான சாதாரண மக்கள் வீடுகளில் பெரும்பாலானவை, மிங் மற்றும் சிங் வமிச காலங்களில் கட்டப்பட்டவை. இவற்றில் 400க்கும் அதிகமானவை மிகவும் செவ்வனே பாதுகாக்கப்பட்டுள்ளன. இவை, இதுவரை ஹென் இனப் பிரதேசத்தில் மிகவும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ள பண்டை கால மக்கள் வீடுகள்.
தற்போது பண்டைய பிங்யௌ நகரில் காணப்படும் 6 முக்கிய கோயில்களும் வீதியின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ள கடைகளும் தொன்மை வாய்ந்தவை. மஞ்சள் மற்றும் பச்சை நிறமுடைய பளபளக்கும் ஓட்டுக் கூரையும் சாம்பல் நிறமுடைய வீடுகளும் வேறுபட்ட சமூகத் தகுநிலையைக் காட்டுகின்றன. இந்தத் தொன்மை வாய்ந்த கட்டடங்கள், மிங் மற்றும் சிங் வமிச காலங்களிலான நகரின் நிலைமையை வெளிப்படுத்தியுள்ளன.
பிங்யௌ நகரில் ஏராளமான தொல் பொருட்களும் பண்டைக் காலச் சிதிலங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, இந்நகரின் வட கிழக்கில் அமைந்துள்ள சென்கொ கோயிலில் பத்தாயிரம் புத்தர் உருவச்சிலைகளைக் கொண்ட மண்டபம், சீனாவின் பண்டை கால மரக் கட்டடங்களில் 3வது இடம் வகிக்கின்றது. இது சுமார் ஆயிரம் ஆண்டு வரலாறுடையது. இம்மண்டபத்தில் மக்களுக்குக் காண்பிக்கப்படும் கி.பி. 10வது நூற்றாண்டிலான வர்ணம் பூசப்பட்ட சிற்பங்கள், சீனாவின் துவக்கக்காலத்திலான வர்ணம் பூசப்பட்ட சிற்பங்களை ஆராயும் ஒரு முன் மாதிரியாகும். கி.பி. 6ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுவான்லின் கோயிலும் குறிப்பிடத் தக்கது. இக்கோயிலுள்ள 10க்கும் அதிகமான மண்டபங்களில் 13வது நூற்றாண்டு முதல் 17வது நூற்றாண்டு வரையிலான ஈராயிரத்துக்கும் அதிகமான, வர்ணம் பூசப்பட்ட மண் சிற்பங்கள் உள்ளன. அவை, சீனாவின் பண்டை கால வர்ணம் பூசப்பட்ட சிற்பக் கலைக் களஞ்சியமென மக்களால் போற்றப்பட்டுள்ளன. அன்றி, இந்தப் பழைய நகருக்குள்ளேயும் வெளியேயும் சம்பவங்கள் பொறிக்கப்பட்ட 1000க்கும் அதிகமான கல் வெட்டுகள் உள்ளன.
பண்டைய பிங்யௌ நகரம் சீனாவின் அண்மை கால பொருளாதார வரலாற்றில் சிறப்பு தகுநிலை பெற்றுள்ளது. 1824ஆம் ஆண்டில் பிங்யௌ நகரில் ழசங்சாங என்னும் சீனாவின் முதலாவது பணப் பரிமாற்ற நிறுவனம் நிறுவப்பட்டது. ரொக்கப் பணம் கொடுப்பதென்ற பாரம்பரிய முறைமைக்குப் பதிலாக, (Draft 0r money order ) வரைவோலை அல்லது பணவிடை முறைப் பயன்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ழசங்சாங் என்னும் பணப் பரிமாற்ற நிறுவனத்தின் அலுவல் சீனா முழுவதும் மட்டுமல்ல, ஜப்பான், சிங்கப்பூர், ரஷியா ஆகிய நாடுகளிலும் பரவியது. இந்நிறுவனத்தினால், பிங்யௌ நகரில் பணப் பரிமாற்றத் துறை விரைவாக வளர்ந்தது. அதன் விறுவிறுப்பான காலத்தில், இத்தகைய நிறுவனங்களின் எண்ணிக்கை 22ஐ எட்டியது. அப்போதைய சீனாவின் பணப் பரிமாற்ற நிறுவனங்களில் இது 50 விழுக்காட்டை வகித்து, சீன நிதித் துறையின் மையமாகத் திகழ்ந்தது.
தற்போது, இந்நகரிலுள்ள மேற்கு வீதி, 100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட நாணயத் தெருவாகும். இவ்வீதியில் அடுத்தடுத்து கடைகள் உள்ளன. வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறுகின்றது. இக்கடைகளுக்கிடையே, சீனாவின் துவக்க நிலையிலான முதலாவது நவீன வங்கியான ழசங்சாங் என்னும் பணப் பரிமாற்ற நிறுவனம் உள்ளது. அது சிறியதாக இருந்தாலும், மக்களின் கவனத்தை ஈர்க்காத போதிலும், கடந்த காலத்தில் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் பரவிய நிதி தொடர் அமைப்புக்களின் மையமாகத் திகழ்ந்தது.
தொன்மை வாய்ந்த பிங்யௌ நகரம் ஒளிமயமானது. இன்றைய பிங்யௌ நகரமும் தொடர்ந்து கவர்ச்சியாக உள்ளது. பண்டைக் கால நகரச் சுவரினால், புதிய யுகத்திலான பிங்யௌ நகரம், வேறுபட்ட பாணியுடன் கூடிய 2 உலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நகரச் சுவருக்குள்ளேயுள்ள வீதிகள், கடைகள், கட்டடங்கள் ஆகியவற்றில் 600 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமை தொடர்ந்து பிரதிபலிக்கின்றன. நகரச் சுவருக்கு வெளியேயுள்ள இடம், புதிய நகரம் என்று அழைக்கப்ப டுகின்றது. பண்டை காலக் கட்டடங்களும் நவீன கட்டடங்களும் ஒன்றாக இணையும் நகரம் இது. கற்பணை வளம் நிறைந்த நகரமும் இதுவே.
|