வூ ச்சியின் குய் ஷான் களிமண் சிற்பக் கலை, சீனாவின் தெற்கு-வடக்கு வம்சக்காலத்தில் துவங்கியது. மிங் வம்சத்தின்போது, இக்கலையின் வளர்ச்சி உச்ச நிலை அடைந்தது. மிங் வம்சத்தின் இறுதியிலும், சிங் வம்சத்தின் துவக்கத்திலும், சிறப்பு தொழில் களிமண் சிலைப் பட்டறைகள் நிறுவப்படத் தொடங்கின. அக்காலத்தில், குன் ச்சு என்னும் இசை நாடகம் பரவி விட்டது. இசை நாடகக் கதாப் பாத்திரங்கள் களிமண் சிலைகளாக கைவினை சிற்பக் கலைஞர்களால் வடிக்கப்பட்டன. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு, குய் ஷான் களிமண் சிலைத் தயாரிப்பு அளவு விரிவாகி மேலும் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. கடந்த நூற்றாண்டின் 50ஆம் ஆண்டுகளில், வூ ச்சி குய் ஷான் களிமண் சிற்ப ஆலை நிறுவப்பட்டது. அதற்குப் பின், குய் ஷான் களிமண் சிற்ப ஆய்வகம், குய் ஷான் களிமண் சிற்ப அருங்காட்சியகம் ஆகியவை அடுத்தடுத்து நிறுவப்பட்டன. குய் ஷான் களிமண் சிற்ப அருங்காட்சியகத்திலிருந்து தற்போதைய சீனக் களிமண் சிற்ப அருங்காட்சியகம் நிறுவப்பட்டது.