• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
'சீனத் தயாரிப்பு' பற்றிய கருத்து கணிப்பு
  2014-09-17 16:55:09  cri எழுத்தின் அளவு:  A A A   

6 வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்,

சீன அரசுத் தலைவராக ஷி ச்சின்பின் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதிய கண்ணோட்டத்துடன் சீனாவை ஆட்சி செய்யத் தொடங்கிய நாள் முதல், அவர் இந்தியாவில் எப்போது பயணம் மேற்கொள்வார் என ஆவலுடன் காத்திருந்தேன். அதே வேளையில், இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு என் எதிர்பார்ப்பு மேலும் கூடியது. அந்நிலையில், ஷி ச்சின்பிங் அவர்கள் செப்டம்பர் திங்கள் 17 முதல் 19-ஆம் நாள் வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்வார் என்ற அறிவிப்பு கடந்த வாரம் அதிகாரபூர்வமாக வெளியானபோது அளவில்லா மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் கொண்டேன். காரணம், உயர்நிலைத் தலைவர்களின் நட்பார்ந்த சந்திப்பும், உறவின் வளர்ச்சியும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதது ஆகும்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு, நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளாண் அல்ல, ஒன்றின் நெருக்கடியை சமாளிக்க மற்றொன்று உதவிக் கரம் நீட்டியதால் ஏற்பட்டதும் அல்ல. இது வாழையடி வாழையாய், காலம் காலமாக உணர்வுபூர்வமாகத் தொடர்ந்து வரும் நட்புறவாகும்.

'நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை' என்றார் திருவள்ளுவர். எனவே, பண்டைக்காலம் தொட்டே கருணையுடனும், அன்புடனும் முகிழ்த்து வளர்ந்தது இரு நாட்டு நட்பு. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்கள், உலகின் வேறெந்த நாடுகளுக்கு இடையிலும் இல்லவே இல்லை. பட்டுப்பாதையும், புத்தமதமும் தந்த இணக்கம், இன்றும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. பல்வேறு தேசிய இனங்கள், வெவ்வேறு பண்பாடு மற்றும் மொழியுடன் வாழும் மக்கள் போன்ற முரண்பாடுகளையும் ஒற்றுமையாக ஒன்றிணைத்து ஒன்றுபட்டு வாழும் கலையை உலக நாடுகளுக்கு போதிக்கும் நாடுகள் இவ்விரு நாடுகளாகும். எனவே, இரு நாடுகளின் உறவு வளர்ச்சி உலக நலனுக்கும் மிகவும் பொருந்தியதாகும். இரு நாடுகளின் உறவை உலக நாடுகள் யாவும் உற்று நோக்கும் நிலையிலும், தற்போதைய உலக அரசியல் சூழலிலும் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அவர்களின் இந்தியப் பயணத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். புதிய தலைமுறையின் நவீன மற்றும் நலன்சார்ந்த சிந்தனைகளோடு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் விளங்குகின்றனர். எனவே, இவர்களின் பயனுள்ள சந்திப்பு, இருதரப்பு உறவை புதிய வரையறைக்கும் உச்ச எல்லைக்கும் கொண்டு செல்லும் என உறுதியாக நம்புகின்றேன்.

அதிலும், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அவர்கள் இந்தியாவில் பயணத்தை தொடங்கும் நாளான செப்டம்பர் 17, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுமாகும். எனவே, தற்செயலாக அமைந்தாலும் இந்த நிகழ்வு உறவின் இறுக்கத்தை மேலும் உறுதியாக்கும் என நம்புகின்றேன். வளரும் நாடுகளில் வல்லரசாக மாறிக் கொண்டு வரும் இந்தியாவும் சீனாவும் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பு, உறுப்பு நாடாக மாற இந்தியா விண்ணப்பித்திருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு மேலும் வளர வேண்டும் என விரும்புகின்றேன்.

இந்தியர்களாகிய நாங்கள், அதிலும் குறிப்பாக சீன வானொலியின் நீண்டகால நண்பர்களான என்னைப் போன்றவர்கள், இந்தப் பயணத்தை வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். சீன வானொலி மீது ஆழ்ந்த அக்கறையும் அன்பும் கொண்ட நாங்கள், இயல்பாகவே இந்திய-சீன நட்புறவில் ஆர்வம் கொண்டுள்ளோம். எனவே, சீன அரசுத் தலைவரின் இந்தியப் பயணம் மூலமாக இருதரப்பு உறவு மேலும் வலுப்பட வேண்டும் எனவும், ஒன்றின் தேவையை மற்றொன்று நிறைவு செய்து முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரியான நட்புறவு உருவாக வேண்டும் எனவும் நேயர்கள் அனைவரும் விரும்புகின்றோம்.


1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040