• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் முக்கிய தொல்பொருட்கள்]
சீனாவின் பண்டை காலப் பட்டுப்பாதை

சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சீனாவில் திறந்துவைக்கப்பட்ட பண்டை கால வர்த்தகப் பாதையான பட்டுப்பாதை உலகப் புகழ்பெற்றது. சீனாவையும் ஐரோப்பிய, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளையும் இணைக்கும் இப்பட்டுப்பாதை, கீழை மற்றும் மேலை நாடுகளுகளின் பொருள் பரிமாற்றத்துக்கும் நாகரிகத் தொடர்புக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது.

பண்டை காலத்தில் சீனாவிலிருந்து மத்திய ஆசியா வழியாக தெற்காசியா, மேற்காசியா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா ஆகியவற்றுக்குச் செல்லும் தரை விழி வணிகப் பாதையாகப் பட்டுப் பாதை திகழ்ந்தது. சீனாவின் ஏராளமான இயற்கைப் பட்டு நூல்களும் பட்டுத் துணிகளும் இப்பாதை வழியாக மேலை நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இதனால் பட்டுப்பாதை என்று அழைக்கப்பட்டது. கி.மு முதலாவது நூற்றாண்டில் சீனாவின் ஹென் வமிசக் காலத்தில் இப்பட்டுப்பாதை உருவாகியது என்று தொல்லியல் ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதைய பட்டுப் பாதையின் தெற்கு வழியிலிருந்து மேற்கு திசையை நோக்கிச் சென்றால், தற்போதைய ஆப்கானிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், ஈரான் ஆகிய புகிதிகளைச் சென்றடையலாம். மிகத் தொலைவில் எகிப்தின் அலெக்ஸான்டிரியா நகரம் சென்றடையலாம். மற்றொரு பட்டுப்பாதை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் காபுல் ஆகியவற்றுக்கு ஊடாக பாரசீகக் வளை குடாவை நோக்கிச் சென்றது. காபூலிலிருந்து தெற்கு நோக்கிச் சென்றால், தற்போதைய பாகிஸ்தானின் கராச்சி நகரை அடைந்த பிறகு, கடல் வழி மூலம் பாரசீகம், ரோம் முதலிய இடங்களுக்கும் செல்லலாம்.

கி.மு.2வது நூற்றாண்டு முதல் கி.பி. 2வது நூற்றாண்டு வரை, பட்டுப் பாதை நெடுகிலும், மேற்கிலிருந்து கிழக்கு வரை, 4 பேரரசுகள் இருந்தன. அவை, ஐரோப்பாவின் ரோம், மேற்காசியாவின் Parthia(பண்டை கால அடிமை முறையுடைய நாடான ஈரான்), மத்திய ஆசியாவின் குஷான், Kushan,( மத்திய ஆசியாவிலும் இந்தியாவின் வட பகுதியிலும் ஆதிக்கம் செலுத்திய பேரரசு), கிழக்காசியாவைச் சேர்ந்த சீனாவின் ஹென் வமிச பேரரசு என்பனவாகும். பட்டுப்பாதையினால், இந்தப் பண்டை கால நாகரிகங்களுடன் நேரடித் தொடர்பு ஏற்பட்டு, அதன் தாக்கம் பரவியது. அதன் பின்னர், எந்த நாகரிகமும் தனித்து வளரவில்லை.

பட்டுப்பாதையின் சிக்கலான வலைத் தொடர்பு மூலம், மேலை நாடுகளும் கீழை நாடுகளும் அடிக்கடி தொடர்பு கொள்ள முடிந்தது. சீனாவின் பண்டை கால ஆவணத்தில் ஹு என்னும் எழுத்துடன் தாவர வகைகள் எழுதப்பட்டிருந்தன. ஹுதௌ, ஹுச்சியௌ, ஹுருப் போன்ற தாவரங்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. தமிழ் மொழியில் அவை முறையே, வாதுமை, மிளகு(pepper), கேரட் (carrot) என்று பொருள்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை, மேலை நாடுகளிலிருந்து வந்தவை. 7வது நூற்றாண்டு முதல் 9வது நூற்றாண்டு வரை தாங் வமிசக் காலத்தில், பட்டுப் பாதை மிகவும் விறுவிறுப்பாக இயங்கியது. சீனாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையே வணிகத் தொடர்பு அதிக அளவில் நடைபெற்றது. மேலை நாடுகளின் அரிய விலங்குகள், நகை வகைகள், வாசனைப் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள், மேற்காசியா மற்றும் மத்திய ஆசியாவின் இசை, நடனம், உணவுப் பொருட்கள், ஆடைகள் முதலியவை சீனாவுக்குள் வந்த வண்ணம் இருந்தன. அதே வேளையில், சீனாவின் பொருட்களும் தொழில் நுட்பமும் பட்டுப் பாதை வழியாக உலகின் பல்வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. எடுத்துக்காட்டாக, பட்டுத் துணி, பட்டுப்புழு, காகித உற்பத்தி மற்றும் அச்சு நுட்பம், அரக்கு (lacquer), மட்பாண்டம், வெடி மருந்து, திசையறி கருவி முதலிய சீனப் பொருட்கள் உலகின் நாகரிகத்துக்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளன.

பட்டுப் பாதையினால், பொருள் வர்த்தகத்தோடு, பண்பாட்டுத் தொடர்பும் விறுவிறுப்பாக நடைபெற்றது. உலகின் 3 முக்கிய மதங்களில் ஒன்றான பௌத்த மதம், கி.மு. 206ஆம் முதல் கி.மு. 220ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் நுழைந்தது. 3வது நூற்றாண்டில் செதுக்கப்பட்ட, சிங்ஜியாங்கின் கச்சிழ் கற்குகைக் கோயிலில் இதுவரை பாதுகாக்கப்பட்டுவரும் சுமார் 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுடைய சுவர் ஓவியம், முற்காலத்தில் இந்தியாவிலிருந்து சீனாவுக்குள் புத்த மதம் பரவிய அடையாளத்தைப் பிரதிபலிக்கின்றது. பௌத்த மதம் இந்தியாவிலிருந்து பட்டுப் பாதை வழியாகச் சீனாவின் சிங்ஜியாங் கச்சிழில் நுழைந்து, கான்சு மாநிலத்தின் துன்ஹுவாங் சென்றடைந்த பின்னர், சீனாவின் உள் வட்டாரங்களில் பரவியது. பட்டுப் பாதை நெடுகிலும் இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ள புத்த மதக் கற்குகைகளில் துன்ஹுவாங் முகௌக் கல்குகை, லொயாங் லுங்மன் கற்குகை முதலியவை புகழ்பெற்றவை. அவற்றில் பெரும்பாலானவை, கிழக்கு மற்றும் மேலை நாடுகளின் கலை அம்சங்களைக் கொண்டிருந்தன. சீனாவுக்கும் மேலை நாடுகளுக்குமிடையிலான பண்பாட்டுத் தொடர்புக்கு இவை சாட்சியமாகத் திகழ்ந்து, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வமாக மாறியுள்ளன.

9வது நூற்றாண்டுக்குப் பின், ஐரோப்பிய மற்றும் ஆசியக் கண்டங்களில் ஏற்பட்ட அரசியல்-பொருளாதார மாற்றங்களினால், கடல் போக்குவரத்து வளர்ச்சி பெற்று, வர்த்தகத்தில் கடல் போக்குவரத்து முக்கிய இடம் வகித்தது. பாரம்பரிய சிறப்பு மிக்க இந்தப் பண்டைக் காலத் தரை வழி வணிகப் பாதை படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. 10வது நூற்றாண்டின் சொங் வமிசக் காலத்தில் பட்டுப் பாதையின் பயன்ப்பாடு மிகவும் குறைவாக இருந்தது.

பட்டுப் பாதை என்னும் பண்டைக் கால வணிகப் பாதை நீளமானது, நீண்ட வரலாறுடையது. உலகின் நாகரிக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, யுனெஸ்கோ ஏற்பாடு செய்த பட்டுப் பாதை பற்றிய புதிய ஆராய்ச்சித் திட்டத்தில், பட்டுப் பாதை பேச்சுவார்த்தைப் பாதையாகப் பயன்படத் தொடங்கியுள்ளது. கீழை மற்றும் மேலை நாடுகளுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்தி, பேச்சுவார்த்தைகளை வளர்க்க உதவுகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040