• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் முக்கிய தொல்பொருட்கள்]

பேரரசர் சிங்ஸ்ஹுவானின் கல்லறையிலிருந்து செப்பு வாகனங்கள் மற்றும் குதிரைகள் அகழ்வு

பேரரசர் சிங்ஸ்ஹுவானின் கல்லறையும் அதிலுள்ள சுடுமண் படைவீரர்களின் உருவச் சிலைகளும் அகழ்ந்து எடுக்கப்பட்ட 6 ஆண்டுகளுக்குப் பின் அதாவது 1980ஆம் ஆண்டில், சீனாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், இக்கல்லறையில் செப்பு வாகனங்களும் குதிரைகளும் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். இந்தக் கண்டு பிடிப்பு உலகை மீண்டும் வியப்பில் ஆழ்த்தியது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் யாங்சியுதே மிகவும் முன்னதாக இந்த நாட்டுக் கருவூலத்தைக் கண்டுபிடித்தார். அப்போது, இக்கல்லறையிலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் ஆராய்ச்சிக்காகத் துளையிட்டுக்கொண்டிருந்தார். திடீரென நிலத்தில் 7 மீட்டர் ஆழத்தில் இருந்து, துளைக் கருவியுடன் ஒரு விரல் அளவுடைய தங்கக் குமிழ் ஒன்று வெளிவந்தது. இத்தங்கக் குமிழை அங்குள்ள பொறுப்பாளர் சென்சியுஹுவாவிடம் கொடுத்த போது, சென்சியுஹுவாவின் கைகள் நடுங்கின. அயராது தேடிவந்த செப்பு வாகனமும் குதிரையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அவர் உணர்ந்தார்.

தொல் பொருட்களை அகழ்ந்து எடுக்கும் பணி, நிபுணர்களின் வழிகாட்டலில் கவனமாக நடைபெற்றது. சுமார் ஒரு திங்கள் முயற்சி, சாதனை நிகழ்த்தப்பட்டது. தரைக்குக் கீழே 7.8 மீட்டர் ஆழத்தில், 2 செப்பு வாகனங்கள், 8 செப்பு குதிரைகள் மற்றும் 2 செப்புப் படைவீரர்களின் உருவச்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

செப்பு வாகனங்களும் செப்பு குதிரைகளும் கண்டுபிடிக்கப்பட்ட பின் அவற்றை எவ்வாறு வெளியே எடுப்பது என்பது பற்றி நிபுணர்கள் தீவிரமாகச் சிந்தித்தனர். அவர்கள், முதலில் அவற்றின் சுற்றுப்புறத்தில் 10 மீட்டர் அகலத்திற்குப் பள்ளம் தோண்டி, மரப் பலகைகளை உள்ளே இறக்கி, செப்பு வாகனம் மற்றும் குதிரைகளையும் அவற்றுடன் ஒட்டிய ஒரு மீட்டர் அளவுடைய மண்ணையும் சேர்த்து மூடி, 4 பெரிய மரப் பெட்டிகளாக உண்டாக்கினர். பின்னர், மிகப் பெரிய உருக்குச் சுருளால் செய்யப்பட்ட மண் வாரியைக் குழியில் இறக்கி, ்தை ஜாக்கி மூலம், செப்பு வாகனம் மற்றும் குதிரைக்கு அடி மட்டம் வரை கொண்டுசென்று, படிப்படியாகத் தள்ளி, முழு பெட்டியையும் மண்வாரிக்குள் நுழையச் செய்தனர். இறுதியில், பாரந் தூக்கியைப் பயன்படுத்தி, செப்பு வாகனம் மற்றும் குதிரைகளுடன் கூடிய மரப் பெட்டிகளை வெளியே எடுத்து, லாரியில் வைத்து, சுடுமண் படைவீரர்களின் உருவச் சிலைக் காட்சியகத்துக்குக் கவனமாகக் கொண்டுசென்றனர்.

செப்பு வாகனமும் குதிரைகளும் இந்தக் காட்சியகத்தில் சீர்செய்யப்பட்டன. சுமார் 2 ஆண்டு காலப் பணிக்குப் பின் அவற்றைக் காட்சிக்கு வைக்கப்பட்ட போது உலகம் வியப்படைந்தது.

செப்பு வாகனங்கள் மற்றும் குதிரைகளின் அளவு, உண்மை செப்பு வாகன மற்றும் குதிரைகளின் அளவை விட பாதி குறைவாக இருந்தது.

அவை தரமானவை. அவற்றின் வடிவமைப்பும் செய்முறையும் நுட்பமானவை. அவற்றின் செய்முறைகளில் சில தற்போதும் பயன்படுத்தப்படுகின்றன. வேறு சில செய்முறைத் தொழில் நுட்பங்கள் இதுவரையிலும் தெரியவில்லை என்பது அறியத் தக்கது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040