• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் முக்கிய தொல்பொருட்கள்]

துன்ஹுவாங் முகௌ கல்குகை

சீனாவின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள துன்ஹுவாங் முகௌ கல்குகை, ஒரு மாபெரும் கலைக் களஞ்சியமாகும். அது சீனாவின் 4 பெரிய கற்குகைகளில் அளவில் மிகப் பெரிய, தொல் பொருட்கள் நிறைந்துள்ள பெரிய கலைக்களஞ்சியமாகத் திகழ்கின்றது. சீனாவின் பத்துக்கும் அதிகமான வமிசக் காலங்களிலும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் காலத்திலும் சிறந்த கற்குகை செதுக்கல் நுட்பத்தை இது பிரதிபலிக்கின்றது. உலகில் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ள மிகப் பெரிய புத்த மத மரபுச்சிதிலம் இது.

வட மேற்கு சீனாவின் கான்சு மாநிலத்து துன்ஹுவாங் நகரின் புறநகரில் மிங்சா மலை ஒன்று உள்ளது. இம்மலையின் கிழக்கு அடிவாரத்தில் பிரிந்துவிட்ட மலைப் பகுதியில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் ஏராளமான குகைகள் செதுக்கப்பட்டுள்ளன. இக்குகைகள், மேல் பகுதி முதல் கீழ் பகுதி வரை 5 அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒழுங்கான முறையில் செதுக்கப்பட்ட இக்குகைகள் மிகவும் கம்பீரமானவை. இதுவே, உலகில் புகழ்பெற்ற துன்ஹுவாங் முகௌ கல்குகை.

கி.பி 366ஆம் ஆண்டில் இக்கல்குகையைக் குடையும் ஒரு நாள், மதக் குருமார் யுயௌசென் துன்ஹுவாங்கிற்குச் சுற்றுலா மேற்கொண்டார். மிங்சா மலையில் ஒளிவீசும் தங்க ஒளியில் பல கோடி புத்தர்கள் தென்படுவது போல காட்சியளித்ததைக் கண்ட அவர், இது நிச்சயம் ஒரு புனித இடம் என்று எண்ணினார். அதனால், அந்த மலைச்சரிவில் முதலாவது புத்தர் உருவச் சிலை இடம்பெறும் குகையைக் குடையுமாறு சிலரைக் கேட்டுக்கொண்டார். இதற்குப் பிந்திய பல வமிசக் காலத்தின் வளர்ச்சியினால், குகைகளின் எண்ணிக்கை அதிகரித்துவந்துள்ளது. 7ஆம் நூற்றாண்டின் தாங் வமிசக் காலத்தில் முகௌ கல்குகையில் புத்தர் உருவச்சிலைகள் இருக்கும் குகைகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதனால் முகௌ கல்குகை ஆயிரம் புத்தர் சிற்பக் குகை என்றும் அழைக்கப்படுகின்றது.

பண்டை காலக் கட்டடம், சுவர் ஓவியம், புத்தர் உருவச்சிலைச் செதுக்கல் ஆகியவற்றுடன் கூடிய கலைக் கூடமாக முகௌ கல்குகை திகழ்கின்றது. பல்வேறு வமிச காலங்களில் மக்கள், குகைகளைக் குடைந்த போது, குகைகளுக்குள் அதிகமான புத்தர் உருவச்சிலைகளைச் செதுக்கியதோடு, ஏராளமான சுவர் ஓவியங்களையும் தீட்டினர்.

வரலாற்று மாற்றத்தினாலும் செயற்கை சீர்குலைவினாலும் இது வரை, முகௌக் கற்குகையில் பாதுகாக்கப்பட்டுள்ள குகைகளின் எண்ணிக்கை ஏறக்கைறைய 500ஐ எட்டியுள்ளது. சுமார் 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய சுவர் ஓவியங்களும், ஈராயிரத்துக்கும் அதிகமான புத்தர் உருவச் சிலைகளும் பேணிக்காக்கப்படுகின்றன. இந்தப் புத்தர் உருவச்சிலைகள் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. ஆடைகளும் உருவங்களும் வேறுபடுகின்றன. அவை, வேறுபட்ட காலங்களின் தனிச்சிறப்பை வெளிப்படுத்தியுள்ளன. முகௌ கல்குகையிலுள்ள சுவர் ஓவியங்கள் மிகவும் கம்பீரமாகக் காணப்படுகின்றன. இக்குகையிலுள்ள சுவர் ஓவியங்களனைத்தையும் இணைத்தால் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவு வரை நீளும்.

துன்ஹுவாங் முகௌ கல்குகை, சீனாவின் ஒதுக்குப்புற பிரதேசத்தில் அமைந்துள்ளதால், நீண்ட காலமாக உலகின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால், 20வது நூற்றாண்டின் துவக்கத்தில், ஒரு மாயமான நூல் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டதுடன், முகௌ கல்குகையிலுள்ள ஏராளமான தொல்பொருட்கள் உலகை அதிர்ச்சியுறச் செய்தன. இதன் விளைவாக, துன்ஹுவாங் முகௌ கல்குகையில், சீனாவின் அண்மை கால வரலாற்றில் மிகவும் துயரமான, மிக அதிக அளவிலான தொல் பொருள் இழப்பு நிகழ்ந்தது.

1900ஆம் ஆண்டில், முகௌ கல்குகையில் தௌ மதத்தவரான வாங், நிலத்தைத் தோண்டிய போது ரகசிய அறையொன்று தற்செயலாகத் தட்டுப்பட்டது. பின்னர், இந்த ரகசிய அறை, திருமறை பொருள் சேமிக்கும் குகை என அழைக்கப்பட்டது. நீளமும் அகலமும் முறையே 3 மீட்டரைக் கொண்ட இச்சிறிய குகையில், திருமறை நூல், ஆவணம், சித்திரதையல், ஓவியம், புத்தர் சிற்பத்துடன் கூடிய துணிப் பதாகை உள்ளிட்ட அரிய தொல் பொருட்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது. கி.பி 4வது நூற்றாண்டு முதல் 11வது நூற்றாண்டு வரையிலான இத்தொல் பொருட்களின் உள்ளடக்கம், சீனா, மத்திய ஆசியா, தெற்காசியா, ஐரோப்பா ஆகியவற்றின் வரலாறு, புவியியல், அரசியல், தேசிய இனம், ராணுவம், மொழி எழுத்துக்கள், கலை இலக்கியம், மதம், மருத்துவம், மருந்து அறிவியல் தொழில் நுட்பம் உட்பட, ஏறக்குறைய அனைத்து துறைகளுடன் தொடர்புடையது. சீனாவின் பண்டை காலக் கலைக் களஞ்சியம் என்று அது போற்றப்பட்டுள்ளது.

தௌ மதத்தவரான வாங் இந்தத் திருமறை பொருள் சேமிக்கும் குகையைக் கண்டுபிடித்த பின்னர், இக்குகையிலுள்ள சில தொல்பொருட்களை எடுத்துக்கொண்டு லாபம் பெற்றார். இந்த மதிப்புள்ள தொல்பொருட்கள் மக்களிடையில் பரவியிருப்பதால், முகௌ கல்குகையில் பண்டை காலத்திலுள்ள கையெழுத்துக்களுடன் கூடிய நூல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த தகவல் பரவியது. ரஷியா, பிரிட்டன், பிரான்சு, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கூறப்படும் ஆய்வாளர்கள் பலர், அங்கு சென்றனர். சிங் வமிசக் கால அரசின் திறமை குறைவினால், குறுகிய 20 ஆண்டுகளுக்குள், துன்ஹுவாங்கிலிருந்து சுமார் 40 ஆயிரம் திருமறை நூல்களையும், மதிப்புள்ள சுவர் ஓவியங்கள் மற்றும் புத்தர் சிற்பங்கள் பலவற்றையும் அவர்கள் திருடிவிட்டனர். இதன் விளைவாக, முகௌ கல்குகைக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டது. தற்போது, பிரிட்டன், பிரான்சு, ரஷியா, இந்தியா, ஜெர்மனி, டென்மார்க், சுவீடன், தென் கொரியா, பின்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தன்ஹுவாங் தொல் பொருட்கள் சேமித்துவைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த எண்ணிக்கை, திருமறை பொருள் குகையிலுள்ள தொல் பொருட்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பகுதியாகும்.

திருமறை பொருள் குகை கண்டுபிடிக்கப்பட்டதுடன், சீன அறிஞர்கள் பலர், இன்னல் நிறைந்த நிலைமையில், தன்ஹுவாங் ஆவணம் பற்றி ஆராயத் துவங்கினர். 1910ல், சீனாவில் தன்ஹுவாங் ஆவண ஆராய்ச்சி பற்றிய முதல் தொகுதி நூல் வெளியிடப்பட்டது. இதனால், உலகில் பிரபலக் கல்வியியல் என்று கருதப்படும் தன்ஹுவாங்வியல் உருவாயிற்று. கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக, தன்ஹுவாங் கலை மீது பல்வேறு நாட்டு அறிஞர்கள் பெரும் அக்கறை கொண்டு, ஆராய்ந்துவருகின்றனர். தன்ஹுவாங்வியல் ஆராய்ச்சியில் சீன அறிஞர்கள் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றனர். தன்ஹுவாங் முகௌ கல்குகை சீனப் பண்பாட்டின் மதிப்பிற்குரிய செல்வம் என்ற கருத்தைக் கொண்டு, அதன் பாதுகாப்பில் சீன அரசு எப்பொழுதும் கவனம் செலுத்திவருகின்றது. 1950ஆம் ஆண்டில், முகௌ கல்குகையை சீனாவின் முதலாவது முக்கியத் தொல் பொருள் பாதுகாப்புப் பட்டியலில் சீன அரசு சேர்த்தது. 1987ஆம் ஆண்டில், யுனெஸ்கோவால் உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் முகௌ கல்குகை சேர்க்கப்பட்டது. தற்போது, முகௌக் குகைக்கு எதிரேயள்ள சான்வெய் மலையின் அடிவாரத்தில் தன்ஹுவாங் கலைக் கூடம் நிறுவப்பட்டுள்ளது. பண்டை கால கற்குகைகள் போன்று சில குகைகள் உண்டாக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, முகௌ கல்குகையிலுள்ள தொல்பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அத்துடன், பயணிகள் பார்வையிடும் இடங்களும் அதிகரித்துள்ளன. இதுவரை உலகில் பேணப்பட்டுள்ள மாபெரும் புத்த மதக் கலைக்கருவூலமாக முகௌ கல்குகை திகழ்கின்றது என்று வெளிநாட்டுப் பயணிகள் பாராட்டியுள்ளனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040