சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டதும் நான் திக்குமுக்காடிப் போனேன். காரணம், சீன வானொலியுடனான என்னுடைய கடந்த காலத் தொடர்புகளில் அல்லது அனுபவங்களில் எதை எழுதுவது, எதை விடுவது? மனதுள் பல்வேறு எண்ணங்கள் அலைஅலையாக எழுந்தாலும், சிலவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
என்னுடைய பட்டப் படிப்பின்போது, 1981-ஆம் ஆண்டு, சக மாணவர் ஒருவர் வைத்திருந்த, 'கல்கண்டு' என்னும் வார இதழில், தமிழ் மொழியில் எந்தெந்த நாடுகள் சிற்றலை வழியாக வானொலிச் சேவைகளை ஒலிபரப்பி வருகின்றன என்ற பட்டியல் அதில் இடம்பெற்றிருந்தது. அப்பட்டியலில், சீன வானொலியின் பெயரும் காணப்பட்டது.
கல்லூரிப் படிப்பின்போது, வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் வாய்ப்பு ஏதுமில்லை. ஒவ்வொரு தேர்விலும், வகுப்பின் முதல் மாணவனாகத் திகழ்ந்த என் கவனமெல்லாம் படிப்பிலேயே இருந்தது. மேலும், விடுதி மாணவனாக இருந்த என்னிடம் அப்போது சிற்றலை வானொலியை வைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை. 1982-ஆம் ஆண்டு இயற்பியலில் இளமறிவியல் பட்டம் பெற்றபின், வீட்டிற்குத் திரும்பிய நான், உள்ளூர் வானொலிகளுக்குக் கடிதம் எழுதத் தொடங்கினேன். 1982-முதல் 1985 வரை, என்னுடைய பெயர் இடம்பெறாத வானொலி எதுவுமே கிடையாது. சென்னை, சென்னை விவிதபாரதி, திருச்சி, திருச்சி விவிதபாரதி, புதுச்சேரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் என அனைத்து உள்ளூர் வானொலிகளுக்கும் நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதினேன்.