பொங்கல், தீபாவளி, மே நாள், புத்தாண்டு நாள் போன்ற விழா நாட்களில், சீன வானொலியில் ஒலிபரப்பாகும் வகையில், எண்ணற்ற நேர்காணல் நிகழ்ச்சிகளை நண்பர் எஸ்.பாண்டியராஜனுடன் இணைந்து தயாரித்திருக்கிறேன். டிரையத்லான் வீராங்கனை அமுதா, அனைத்து ஜலசந்திகளையும் நீந்திய குற்றாலீஸ்வரன், சீனாவில் நடைபெற்ற உலக மகளிர் மாநாட்டில் கலந்து கொண்ட, எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன், முன்னாள் தமிழக முதல்வர் பக்தவச்சலம் அவர்களின் மகளான சரோஜனி வரதப்பன், சமையற்கலைஞர், மெனுராணி செல்லம், பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, எழுத்தாளர் பாவண்ணன், ராஷ்மி (திருமதி.ஒய்.ஜி.பார்த்தசாரதி), அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், திருமதி.ந.கடிகாசலம்… இவ்வாறு பலப்பலரை சந்தித்து நாங்கள் தயார் செய்த நேர்காணல், சிறப்பு நிகழ்ச்சிகளாக சீன வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கிறது.
சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு, சிறந்த நேயர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையை 1991-ஆம் ஆண்டில் முதன்முதலாகத் துவக்கியது. அப்போது, சிறந்த நேயர்களாக நான்கு நேயர்கள் தேர்வு செய்யப்பட்டனர். என்னுடன் எஸ்.இராமபத்திரன், கவி.செங்குட்டுவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இன்னொரு நேயரின் பெயர் என் நினைவில் இல்லை. அப்போது முதல், 2012-ஆம் ஆண்டு வரை, 22 ஆண்டுகள், தொடர்ந்து சிறந்த நேயர்களின் பட்டியலில் இடம்பெற்று வரும் நேயர் நான் மட்டுமே என்பதை இங்கே பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
சில ஆண்டுகளுக்கு முன், சீன வானொலியின் அனைத்து மொழிப் பிரிவுகளிலும் முதன்மை அறிவிப்பாளராக தி.கலையரசி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அவரின் பணிவாழ்க்கையில் இது மிகப் பெரும் மதிப்பு வாய்ந்தது ஆகும். அவர், முதன்மை அறிவிப்பாளராக தேர்வு செய்யப்பட்டபோது, அப்போது இருந்த 41 மொழிப் பிரிவு நேயர்களிலும், சிறந்த நேயராக நான் தேர்வு செய்யப்பட்டேன் என்பதை எப்போதும் நான் பெருமையாக நினைக்கின்றேன். சீன வானொலியுடனான உறவில், இதுவே எனக்குக் கிடைத்த மிகப் பெரும் அங்கீகாரமாக இன்றளவும் கருதுகின்றேன்.
சீன வானொலி தமிழ்ப்பிரிவு, முதன்முதலாக, தமிழ் மூலம் சீனம் என்னும் நிகழ்ச்சியைத் துவக்கியது. அப்போது, சில பாடநூல்களையும் நேயர்களுக்கு அனுப்பியது. இப்பாட நூல், சீன மொழியைக் கற்க விரும்பும் நேயர்கள் அல்லாதோரையும் அடைய வேண்டும் என விரும்பினேன். எனவே, நண்பர் பாண்டியராஜன், ராமபத்திரனுடன் இணைந்து, 1995-ஆம் ஆண்டில், இந்நூலை அச்சிட்டேன். Book-Post-ல் அஞ்சல் செலவாக, ஒரு ரூபாய் அஞ்சல் தலை அனுப்பும் நேயர்களுக்கு இந்நூல் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டது. இத்தகவலை அப்போது தினமணி நாளேட்டில் நண்பர் கவி.செங்குட்டுவன் அவர்கள், என்னுடைய முகவரியுடன் பெட்டிச் செய்தியாக வெளியிட்டு உதவி செய்தார்.
சீன வானொலிப் பணியாளர்கள் என்னை எந்த அளவிற்கு நேசிக்கின்றனர் என்பதற்கு இச்செய்தியே ஒரு சான்றாகும். மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்து வந்தார் நண்பர் சாங்சுங்ஜெ. எஸ்.சுந்தரன் ஓய்வு பெற்ற நிலையிலும், முனைவர் ந.கடிகாசலம் அவர்கள் தாய்நாடு திரும்பிய நிலையிலும், ஒலிபரப்பில் ஆண்குரல் ஒன்று தேவைப்பட்டது. தமிழில் புலமை பெற்றிருந்தாலும், சாங்சுங்ஜெ உடனடியாக வாசிப்பில் இறங்கிவிடவில்லை. தமிழக வானொலிகளின் செய்திகளைப் பதிவு செய்து அனுப்புமாறு என்னிடம் கேட்டார். நானும் பல செய்திகளை ஒலிநாடாவில் பதிவு செய்து அவருக்கு அனுப்பினேன். அவற்றைக் கேட்டு, படிப்படியாகப் பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னரே அவர், விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சியை வாசிக்கத் துவங்கினார். அப்போது, நிகழ்ச்சிகளில் தம் பெயரை தமிழ்ச்செல்வம் என அவர் கூறினார். பிறகு, என்னிடம், தமக்கு மிகவும் பிடித்த வெளிநாட்டு மொழி தமிழ் எனவும், தமக்கு பிடித்த வெளிநாட்டு நண்பர் செல்வம் எனவும், இவ்விரண்டையும் இணைத்து, தமிழ்ச்செல்வம் என பெயரிட்டுக் கொண்டதாக எனக்குக் கடிதம் எழுதினார். மனம் நெகிழ்ந்து போனேன்.
கைப்படக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தவேளையில், என்னுடன் பணியாற்றிய நண்பர் ஜி.ஞானவேலு என்பவர், எனக்காக ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கித் தந்தார். என்னுடைய முதல் மின்னஞ்சல் முகவரி sudhacri2001@yahoo.co.in. இம்முகவரி உருவாக்கப்பட்ட ஆண்டு 2001. அப்போது முதல், ஆங்கிலம் மொழி மூலம், என்னுடைய கருத்துக்களை நாள்தோறும் மின்னஞ்சல் மூலம் அனுப்புவேன். கலையரசி, வாணி, கலைமகள் உள்ளிட்டோர் எனக்கு ஆங்கில மொழி மூலமாகவே பதில் தெரிவிப்பர். பிறகு, 2004-ஆம் ஆண்டு, பாண்டிச்சேரிக்கு நான் வந்து தங்கியபோது, நண்பர் பாலக்குமார், தமிழில் எவ்வாறு மின்னஞ்சல் அனுப்புவது எனக் கற்றுத் தந்தார். அவரிடமிருந்து கற்றுக் கொண்டு, யுனிகோட் எழுத்துருவில், 2004 முதல் கடிதங்களை அனுப்பத் தொடங்கினேன். சீன வானொலியைப் பொறுத்தவரை, இணைய ஆசான் எனக்கு என்.பாலக்குமார்தான். அவர் எனக்கு கோடு போட்டார். அதில் நான் ரோடு போட்டேன். அவ்வளவுதான்.
நண்பர்கள் பாலக்குமார், ராஜகோபால், ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து, CRISMSNET என்ற அமைப்பை 2004-ஆம் ஆண்டில் துவக்கினேன். நாள்தோறும், சீனா மற்றும் சீன வானொலி பற்றிய தகவல்களை உடனுக்குடன் இதன் மூலம் நாங்கள் அறிவித்தோம். சுமார் 7 ஆண்டுகள் இவ்வலைப்பின்னல் அமைப்பு தொடர்ந்து நாள்தோறும் செயல்பட்டது. தகவல் தொடர்பு நவீனமாகிவிட்டதால், தேவையில்லை எனக் கருதி, நாள்தோறும் செய்திகள் அனுப்புவதை நிறுத்திக் கொண்டோம். தற்போது, முக்கியச் செய்திகளை மட்டும், இதன் மூலம் நேயர் நண்பர்களுக்கு அறிவிக்கின்றோம்.
நண்பர்கள் பாலக்குமார், ராஜகோபால், ஜெயச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து, 2004-ஆம் ஆண்டில் கடினமான பயணமொன்றை மேற்கொண்டேன். ஆம், இரு நாட்களில், மோட்டார் சைக்கிள் மூலமாக, 8 மாவட்டங்களில் 825 கி.மீ. பயணம். அப்பயணத்தின்போது, பல நண்பர்களைச் சந்தித்தோம். குறிப்பாக, பெரம்பலூர் சோழன் சீன வானொலி நேயர் மன்றம், திருச்சி ஸ்ரீரங்கம் சீன வானொலி நேயர் மன்றம், கடலூர் மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம் ஆகியவற்றைத் துவக்கி வைத்தோம். அன்றி, எங்கள் பயணத்திற்கு ஒரு வாரகாலத்திற்கு முன்பு, கும்பகோணம் பள்ளியில் நிகழ்ந்த தீவிபத்தில் உயிரிழந்த 94 பள்ளிச் சிறார்களின் குடும்பத்தினர் சிலரைச் சந்தித்து, சீன வானொலி சார்பாக ஆறுதலும், இரங்கலும் தெரிவித்தோம்.
சீன வானொலியை செவிமடுத்த நாளிலிருந்து, இன்றுவரை, நாள்தோறும் சீன வானொலி நிகழ்ச்சியைக் கேட்டு குறிப்பெழுதுகிறேன். அனைத்து நிகழ்ச்சிகளையும் கேட்டு, குறிப்பெழுதி, ஏராளமான கடிதங்களை நான் சீன வானொலிக்கு அனுப்பி வருகிறேன். ஒரு நாள் தவறாமல், நான் குறிப்பெழுதி வருவது, சீன வானொலிப் பணியாளர்கள் அனைவருக்கும் தெரியும். எடுத்துக்காட்டாகத் தெரிவிக்க வேண்டுமெனில், இலவசக் கடித உறை இல்லாதபோது, செலவு செய்து வான் அஞ்சல் மூலம் நான் அனுப்பிய கடிதங்களின் எண்ணிக்கை.. 1991- 3033 கடிதங்கள், 1992- 3033 கடிதங்கள், 1993- 3160 கடிதங்கள், 1994- 3278 கடிதங்கள், 1996- 3534 கடிதங்கள், (இதில் விடைத்தாட்களின் எண்ணிக்கையை சேர்க்கவில்லை). சில நாட்களில், வெளிப்பயணம் சென்றால், உணவு விடுதியில் சாப்பிடாமல் இருந்து, அந்தப் பணத்தைச் சேமித்து, அதிலிருந்து அஞ்சல் தலைகளை நான் வாங்கியிருக்கின்றேன். சீன வானொலியின் 70-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சியில் வைக்க வேண்டும் என கலைமகள் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 2010-ஆம் ஆண்டு குறிப்பு நோட்டினை சீன வானொலிக்கு அஞ்சல் மூலமாக நான் அனுப்பி வைத்தேன்.