அந்நிலையில், 24.4.1994 அன்று என்னுடைய திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில், சீன வானொலியின் நூற்றுக் கணக்கான நீலநிறக் கொடிகள் பலவற்றை இணைத்து, திருமண மண்டபத்தில் தோரணமாய் தொங்கவிட்டேன். ஒய்.எஸ்.பாலு, எஸ்.பாண்டியராஜன், எஸ்.இராமபத்திரன், எம்.என்.பாலக்குமார், ஜி.இராஜகோபால், ஆர்.செந்தாமரை, தேவராஜன் உள்ளிட்ட 52 நேயர்கள் என்னுடைய திருமணத்தில் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட மன்ற நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கு கொண்டேன். சீன வானொலி தொடர்பான, செய்தி ஊடகங்களில் விளம்பரம் மற்றும் செய்திகளை வெளியிட்டோம். நேயர் மன்றக் கூட்டங்களை அடிக்கடி நடத்தி, நேயர்களிடமிருந்து ஏராளமான கருத்துக் கடிதங்களைப் பெற்று, சீன வானொலிக்கு அனுப்பினோம். சராசரியாக, மன்றக் கூட்டம் ஒன்றில், சுமார் 3000 கருத்துக் கடிதங்களை (விடைத்தாட்கள் அல்ல) மன்ற உறுப்பினர்களிடமிருந்து திரட்டி, விரைவு அஞ்சல் மூலம் சீன வானொலிக்கு அனுப்புவோம். மன்றக் கூட்டத்தை ஒரே இடத்தில் நடத்தாமல், நேயர்களின் பல்வேறு இடங்களில் நடத்துவோம். விழுப்புரம், கடலூர் துறைமுகம், வளவனூர் புதுப்பாளையம், வளவனூர் வி.புதூர், பனப்பாக்கம், வாதானூர், செஞ்சி, ஆனத்தூர் தொட்டிமேடு, பாண்டிச்சேரி தாவரவியல் பூங்கா, வளவனூர் என பல்வேறு இடங்களில் நாங்கள் மன்றக் கூட்டங்களை நடத்தினோம். எனவே, சீன வானொலி வரலாற்றில் முதன்முதலாக விழுப்புரம் மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம் மட்டும் சிறந்த நேயர் மன்றமாக அறிவிக்கப்பட்டது.
1995-ஆம் ஆண்டில், தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ்ப்பிரிவுத் தலைவர் எஸ்.சுந்தரன் அவர்கள் தமிழகம் வந்தார். அவருடன் இணைந்து, தஞ்சை மாநாட்டில் கலந்து கொண்டேன். தமிழக அரசு அவருக்கு ஒதுக்கிய தனி வீட்டில், ஒரு பகல் மற்றும் ஓரிரவு தங்கியது மறக்க முடியாக நினைவாகும். அப்பயணத்தின்போது, திண்டுக்கல் ஜவஹர் மற்றும் மோதிலால் ஆகியோரின் ஏற்பாட்டில், பழனி சித்தானந்தா திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் எஸ்.சுந்தரன் அவர்கள் கலந்து கொண்டார். அக்கருத்தரங்கில், அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மன்றத்தின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
1997-ஆம் ஆண்டு, தஞ்சையில், பூண்டி கே.குப்புசாமி மற்றும் மா.உலகநாதன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஹோட்டல் டெம்பிள் டவர் என்னும் இடத்தில் அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றக் கூட்டம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் தி.கலையரசி மற்றும் பாங்யாசின் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இப்பயணத்தின்போதுதான், மொழிபெயர்ப்பாளரான பாங்யாசினுக்கு மலர்விழி என்ற பெயர், நேயர்களால் சூட்டப்பட்டது. பின்னாளில், தன் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து, கருத்தரங்குச் செலவினை கே.குப்புசாமி மேற்கொண்டார் என்பதை அறியும்போது மிகவும் வருத்தமாக இருந்தது.
1999-ஆம் ஆண்டு, திமிரியில் நடைபெற்ற கருத்தரங்கில், எஸ்.சுந்தரன் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது, அவர் தமிழ்ப்பிரிவுத் தலைவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். கருத்தரங்கு முடிந்ததும், செஞ்சியில் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார். செஞ்சிக் கோட்டையை அப்போது நான் அவருக்கு சுற்றிக் காண்பித்தேன். செஞ்சி மலைகளின் மீது கட்டப்பட்டிருந்த மதிற்சுவர்கள், பெய்ஜிங் பெருஞ்சுவர் போல உள்ளது என அப்போது அவர் கூறினார்.
தொடர்ந்து, கலையரசி மற்றும் கலைமகள் ஆகியோர் ஆரணியில் நடைபெற்ற கருத்தரங்கிலும், கலைமகள் மற்றும் வாணி ஆகியோர் பாண்டிச்சேரியில் நடைபெற்ற கருத்தரங்கிலும், கலையரசி மற்றும் சாங்சியுலின் ஆகியோர் வந்தபோதும், பிறகு இதர மொழிப் பிரிவினருடனும் வருகை தந்தபோதும், வாணி-விஜயலட்சுமி ஆகியோரின் பயணத்தின்போதும், தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள கலையரசி அவர்கள் வந்தபோதும், அவர்களுக்கான ஏற்பாடுகள் பலவற்றை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து முடித்தேன்.
கருத்தரங்குகளைப் பற்றி குறிப்பிடும்போது, ஒரு நிகழ்வு என்னுள் எழுகிறது. 'தினமலர்' நாளிதழின் பாண்டிச்சேரி பதிப்பாசிரியர், சீனாவில் பயணம் மேற்கொண்டு, 'வார மலர்' இதழில் பயணக் கட்டுரை ஒன்றை எழுதினார். அக்கட்டுரையை வாசித்த எஸ்.பாண்டியராஜன், சீன வானொலிக்காக, அவரை நேர்காணல் எடுக்க விரும்பி கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பினார். அவர் ஒதுக்கிய நாளில், நானும் எஸ்.பாண்டியராஜனும், பதிப்பாசிரியரைச் சந்தித்து சீன வானொலிக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றைப் பதிவு செய்தோம். பதிவு செய்த பின்னர், இன்னும் இரு வாரங்களில், 6 பேரடங்கிய சீன வானொலிப் பிரதிநிதிக்குழு, தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளது எனக் கூறினேன். சற்றே யோசித்தபின், சரி, பிரதிநிதிக்குழுவின் செலவு முழுவதையும் 'தினமலர்' நாளேடு ஏற்றுக் கொள்ளும் என்றார். குறிப்பிட்ட நாளில், சொகுசு வேனுடன் தலைமை செய்தியாளர் ஒருவரை அனுப்பினார். 2002-ஆம் ஆண்டில், திருச்சி இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் கருத்தரங்கு முடிந்தவுடன், பிற இடங்களை தினமலர் ஏற்பாட்டில் சுற்றிப் பார்த்தோம். குறிப்பாக, மதுரைக் கோயிலின் மேற்கூரைத் தளத்தின் மீது ஏறிச் செல்லவும், கன்னியாகுமரி கடற்கரை அருகில் விடுதியில் தங்கி சூரியோதத்தைக் காணவும்.. என சிறப்பான ஏற்பாடுகளை 'தினமலர்' நாளோடு சீன வானொலி பிரதிநிதிக் குழுவிற்காக ஏற்பாடு செய்தது.
இவ்வாறாக, சீன வானொலியுடனான என் பயணம் தொடர்ந்து வரும்போது, 2009-ஆம் ஆண்டில் என்னைத் தொடர்பு கொண்ட தி.கலையரசி அவர்கள், எனக்கு இரண்டாவது முறையாக சீனாவில் பயணம் செய்யும் வாய்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். முதலில் நான் மறுத்தேன். இதுவரையில் பயணம் செய்யாத ஒரு நேயருக்கு இந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். ஆனால், அவரோ, திபெத்தில் மேற்கொள்ளும் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் எனவும், அதனால்தான் என்னைத் தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார். அவரின் கோரிக்கையை ஏற்று, நண்பர் வாணியுடன் இணைந்து, திபெத்தில் வெற்றிகரமாக பயணத்தை நிறைவேற்றினேன். (இப்பயணக் கட்டுரையை நிழற்படங்களுடன் www.critamilclub.com என்ற முகவரியில் காணலாம்). பயணத்தின்போது, சுவையான அனுபவங்கள் பல ஏற்பட்டன. அவற்றில், இரு நிகழ்வுகளை மட்டும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். முதலாவதாக, திபெத் பிரதேசக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், பயணக் குழுவிற்கு மாபெரும் விருந்து வழங்கப்பட்டது. அவ்விருந்தின் போது, திபெத் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன், என்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டேன். விருந்து நிறைவடையும்போது, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், தன்னுடைய நெற்றியை என்னுடைய நெற்றியோடு சேர்த்தார். அப்போது கரவொலி எழுந்தது. எனக்கு முதலில் புரியவில்லை. பிறகுதான், நெற்றியோடு நெற்றியை இணைப்பது, திபெத்தில் அளிக்கப்படும் மிகப் பெரிய மரியாதை எனப் புரிந்தது. அவ்விருந்தில், அத்தகைய மரியாதை எனக்கு மட்டுமே கிடைத்தது. அடுத்து, திபெத்தில் பண்டைக்காலத்தில் முதன்முதலாகக் கட்டப்பட்ட மாளிகையை நோக்கிப் பயணித்தபோது நிகழ்ந்தது. சுமார் 25 பேர் அடங்கிய குழுவினர் மலையின் மீது ஏறத் தொடங்கினோம். ஒவ்வொருவராகப் பின்தங்க, நான் இயல்பாக படியேறி, மலையின் உச்சியை அடைந்து, அங்கேக் கட்டப்பட்டிருக்கும் மாளிகையை அடைந்தேன். அனைவரும் அங்கே வந்தபின், திபெத் பயண ஏற்பாட்டைக் கவனித்தப் பெண்மணி ஒருவர், என்னைவிட வயது குறைந்தவர்கள் பலர் இருந்தபோதிலும், மலையில் முதலாவதாக ஏறிய எனக்குப் பாராட்டுத் தெரிவித்தார். இவ்விரு நிகழ்வுகளும் ஏதோ நேற்று நடந்தது போல, இன்னும் என் நினைவில் இருந்து கொண்டேயிருக்கிறது.
அடுத்து, 2011-ல் நண்பர்கள் எஸ்.பாண்டியராஜன் மற்றும் என்.பாலக்குமார் ஆகியோருடன் இணைந்து, மூன்றாவது முறையாக சீனப் பயணம் மேற்கொண்டேன். அந்தப் பயணத்தின்போது, சீன வானொலிப் பணியாளர்கள் என் மீது காட்டிய கரிசனம் தொடர்ந்து கொண்டிருப்பதை அறிந்து மனம் நெகிழ்ந்தேன். (இப்பயண அனுபவங்களையும் www.critamilclub.com என்னும் பக்கத்தில் காணலாம்). சரி, சீன வானொலியுடனான எனது நினைவுகளை எழுதிக் கொண்டே போகலாம். எனவே, சில முக்கிய நிகழ்வுகளை மட்டும் இங்கே பட்டியலிடுகின்றேன்.
எஸ்.சுந்தரன்.. சீன வானொலிக்கு நான் இந்த அளவிற்குப் பங்காற்றியிருக்கின்றேன் என்றால், அவர்தான் முழுமுதல் காரணம். தம் கைப்பட, அவர் எழுதிய கடிதங்களை பல கோப்புக்களாக சேகரித்திருக்கின்றேன். பக்கங்களின் எண்ணிக்கை சுமார் 1000 இருக்கலாம். குறுகிய கால, கடிதம் மூலமான பழக்கம் மட்டுமே ஆயினும், என் மீது அவர் நம்பிக்கையை வைத்தார். அந்த நம்பிக்கையை இன்றளவும் நான் காப்பாற்றி வருகின்றேன்.. பின்னாட்களில் அவர் கடிதம் எழுதியபோது, அன்புத் தம்பி எஸ்.செல்வம் என எழுதத் தொடங்கினார். எனக்குத் தெரிந்த வரையில் தம்பி என ஒவ்வொரு கடிதத்திலும் அவர் அழைத்தது என்னை மட்டும்தான். (இத்தகவலை அவரே எனக்குத் தெரிவித்தார்). அடுத்து, 8 ஆண்டுகள் கழித்து எனக்கு மகன் பிறந்தபோது, வாங்டெங்குவா எனப் பெயரிட்டார். அதற்கான காரணத்தையும் விளக்கினார். அன்றி, புதிய சட்டைகளையும் வாங்கி அனுப்பினார். இன்றளவும், இவருடன் தொடர்பில் இருப்பதற்கு நான் உளம் மகிழ்கின்றேன்.
சீன வானொலியின் மூலமாக எனக்கு, சீன வானொலியில் அற்புதமான நண்பர்கள் பலர் கிடைத்தனர். 1997-ஆம் ஆண்டு முதல், 2011-ஆம் ஆண்டு வரை, தி.கலையரசி அவர்கள் சீன வானொலியின் தமிழ்ப்பிரிவுத் தலைவராகப் பணிபுரிந்த முழுக் காலமும், அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் தலைவராக நான் செயலாற்றினேன். சீன வானொலியின் வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் செல்ல அவர் கடுமையாகப் பாடுபட்டார். என்னால் இயன்றவரை, நானும் பல்வேறு முன்மொழிவுகளைத் தெரிவித்தேன். ஒரு மணி நேர ஒலிபரப்பு, இணைய தளம் என முக்கியச் சாதனைகள் யாவும் கலையரசி அவர்களின் காலத்தில்தான் நடைபெற்றது. தமிழ்ப்பிரிவின் அனைத்துச் செயல்பாடுகள் பற்றியும், என்னுடன் தொடர்ந்து கலந்தாய்வு செய்வார். நான் வழங்கும் ஆலோசனைகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வார்.
அடுத்து நண்பர் வாணி… 2001-ஆம் ஆண்டில், முதன்முதலாக நான் மின்னஞ்சல் மூலம் சீன வானொலிக்குக் கடிதம் எழுதத் தொடங்கினேன். அதே ஆண்டில், கடிதப் பிரிவைக் கையாண்டவர் நண்பர் வாணிதான். அதே ஆண்டில்தான், என்னுடைய மனைவியும் கருத்தரித்தார். அப்போது, வாணி அவர்கள், என் மனைவிக்கு ஆலோசனைகள் பலவற்றை வழங்கினார். அவருடைய ஆலோசனைகளை இன்றளவும் மறக்க முடியாது. தொலைபேசி மூலம் எப்போது தொடர்பு கொண்டாலும், சுதா அக்கா நலமா? என கேட்காமல் இருக்க மாட்டார். திபெத் பயணத்தின்போது, எனக்கு அவர் முழு உதவியை வழங்கினார். அடுத்து, தமிழ்ப்பிரிவின் தற்போதைய தலைவர் கலைமகள்.. முதன்முதலாக இவரைப் பார்த்தபோது, ஏதோ சிறு விளையாட்டுப் பிள்ளை போல இவர் தோன்றினார். 2003-ஆம் ஆண்டில், கடிதப் பிரிவிற்கு இவர் பொறுப்பேற்றபோது, எண்ணற்ற கடிதங்களை இவர் எனக்கு எழுதினார். 2009-ஆம் ஆண்டில், இவருடைய காரில் அழைத்துச் சென்று, ஒலிம்பிக் விளையாட்டு அரங்கைச் சுற்றிக் காண்பித்தார். அன்றி, 2011-ஆம் ஆண்டில், இரு விருந்துகளுக்கு, தம் கணவரை இவர் அழைத்து வந்தார். பயணத்தின்போது பல்வேறு உதவிகளை இவர் வழங்கினார். இவரின் 'சீனாவில் இன்ப உலா' புத்தகம் வெளியிட என்னால் இயன்ற சிறு உதவியை இவருக்கு வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். கலைமணி, தேன்மொழி, மோகன், வான்மதி, மீனா, மதியழகன், ஜெயா, ஈஸ்வரி, சிவகாமி, சரஸ்வதி மற்றும் இளம்பணியாளர்கள் அனைவரின் நட்பினையும் நான் பேணி மதிக்கின்றேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அனைவரும் எனக்குக் கடிதம் எழுதுகின்றேனர். இதுவே, என் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாக எடுத்துக் கொள்கின்றேன்.