அந்நிலையில், பட்டப்படிப்பிற்குப் பின், 1984-ஆம் ஆண்டு, தனியார் பொறியியற்கல்லூரி ஒன்றில் பணியிலமர்ந்தேன். என்னுடைய சிறப்பான பணியைப் பாராட்டி, கல்லூரி முதல்வர் எனக்கு ரூ.500- பரிசாக வழங்கினார். அப்போது, என்னுடைய ஒரு திங்கள் ஊதியம் ரூ.720-. அந்நிலையில், அக்காலக்கட்டத்தில், ரூ.500 எனக்கு பெரும் தொகையாக இருந்தது. கல்லூரி முதல்வர் பேராசிரியர் கே.வி.நடராசன் என்பவர் நினைவாக, ஏதேனும் பொருள் ஒன்று வாங்க விரும்பினேன். இயல்பாகவே, என் மனம் நாடிய பொருள் வானொலிப் பெட்டிதான். அன்று மாலையே, பாண்டிச்சேரிக்குச் சென்று, பிலிப்ஸ் வானொலிப் பெட்டி ஒன்றை வாங்கினேன்.
அன்று வரையில், அம்மா வைத்திருந்த வானொலியின் மூலமாக உள்ளூர் வானொலிகளைக் கேட்டுக் கொண்டிருந்த நான், புது வானொலி தந்த மோகத்தில், சிற்றலைக்குச் சென்று, அப்படியும் இப்படியுமாக அலைந்தேன். அப்போது, எனக்கு வேறுபட்ட தமிழ்க்குரல் ஒன்று கேட்டது. நிகழ்ச்சியின் முடிவில், முகவரியைக் கூறினார்கள். என்னால் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. இரவு நேரத்தில்மட்டும்தான், சீன வானொலி ஒலிபரப்பாகும் என எனக்குத் தெரியாது. மறுநாள், பகல் முழுக்க முயற்சித்தேன். ஒலிபரப்பைக் கேட்க இயலவில்லை. ஆனாலும், இரவு நேரத்தில் நான், அவ்வொலிபரப்பைக் கேட்டு, கவனமுடன் முகவரியைக் குறித்துக் கொண்டேன்.
மறுநாள், ரூ.5- மதிப்புள்ள ஏரோகிராம் அஞ்சல் மூலம் சீன வானொலிக்குக் கடிதம் எழுதினேன். என்ன அதிசயம்? 20 நாட்களுக்குள் எனக்கு பதில் கடிதம் வந்தது. எனக்கான நேயர் எண்ணையும் வழங்கியிருந்தார்கள். பிறகென்ன? உள்ளூர் வானொலிகளுக்கு அதுவரை நான் ஒதுக்கியிருந்த நேரமெல்லாம், சீன வானொலிக்காகக் கழிந்தது. கடிதங்கள் எழுதத் தொடங்கினேன். பதில் கடிதங்களும் நிறைய வந்து கொண்டேயிருந்தன. சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் தலைவர் எஸ்.சுந்தரனும் எனக்கு நிறைய கடிதங்களை எழுதிக் கொண்டேயிருந்தார்.
அந்நிலையில், சக நண்பர்களுக்கும் சீன வானொலியை நான் அறிமுகம் செய்தேன். அப்போது, கருத்தரங்கு நடைபெறவிருப்பது பற்றி, சீன வானொலியில் சில அறிவிப்புக்கள் வெளியாகும். ஆனால், சுமார் 100 குடும்பங்களை மட்டுமே கொண்டிருந்த மிகச் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான், தனியாகப் பயணித்து கருத்தரங்கில் கலந்து கொள்ளத் தயங்கினேன். மேலும், அப்போதெல்லாம், இதுபோன்ற நடவடிக்கைகளிலும் நான் ஆர்வமும் காட்டவில்லை. சீன வானொலியைக் கேட்போம், கடிதம் எழுதுவோம் என்ற அளவிலேயே என்னுடைய எல்லையை வகுத்துக் கொண்டேன்.
சீன வானொலி பற்றி, வளவனூர் தட்டச்சுப் பயிற்சி மையத்தில் அறிமுகமான நண்பர் வளவனூர் வி.புதூர் திரு. எஸ்.இராமபத்திரனிடம் தெரிவித்தேன். சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த அவரும், சீன வானொலிக்கு நிறையக் கடிதங்கள் எழுதத் தொடங்கினார்.
1990-ஆம் ஆண்டு, எனக்கு எழுதிய கடிதமொன்றில், தென்னாற்காடு மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத்தை துவக்குமாறு திரு.எஸ்.சுந்தரன் என்னிடம் கோரினார். இயற்கையிலேயே அமைதியான சுபாவம் கொண்ட நான், அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்கினேன். அப்போது, சீன வானொலியிடமிருந்து ராமபத்திரனின் முகவரியைப் பெற்றுக் கொண்ட, விழுப்புரம் திரு.எஸ்.பாண்டியராஜன், தம்மை சந்திக்க வருமாறு ராமபத்திரனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். தம்முடன், துணைக்கு வருமாறு ராமபத்திரன் என்னை அழைத்தார். நான் மறுத்துவிட்டேன். பின்னர், இரு திங்களுக்குப் பின், 1991-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களில், வளவனூரில் நடைபெற்ற நண்பரின் திருமணத்தில் நானும், ராமபத்திரனும் கலந்து கொண்டபோது, விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன் வீட்டிற்குச் செல்லலாமா என அழைத்தார். மறுத்தேன். பின்னர், ராமபத்திரன் வலியுறுத்தி அழைத்தபின்னர், அரைமனதுடன் பாண்டியராஜன் வீட்டிற்கு சென்றேன். 1991-ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி ஒன்றை எங்களுக்கு வழங்கினார். பின்னர், தென்னாற்காடு மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத்தைத் துவக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு, அதற்கான செயல்பாடுகளை விளக்கிக் கூறினார்.