பின்னர், 1991-ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 14-ஆம் நாள், அதாவது தமிழ்ப்புத்தாண்டு நாளன்று, விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன் அவர்களின் இல்லத்தில், தென்னாற்காடு மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம் துவக்கப்பட்டது. அப்போது, மன்றப் பொறுப்பு ஒன்று எனக்கு வழங்கப்பட்டது. ஆனால், அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. சாதாரண உறுப்பினராக மட்டும் இருக்கிறேன் எனத் தெரிவித்தேன்.
அதைத் தொடர்ந்து, 1992-ஆம் ஆண்டு, ஜாலிக் கோப்பைக்கான, 'சீனாவின் வரலாறும் பண்பாடும்' என்னும் பொது அறிவுப் போட்டி ஒன்றை சீன வானொலி நிலையம் நடத்தியது. அப்போட்டியில், நானும், எஸ்.இராமபத்திரனும் தலா பத்தாயிரம் விடைத்தாட்கள் அனுப்ப வேண்டும் என தீர்மானித்து, அவ்வாறே இருவரும் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான விடைத்தாட்களை (குறிப்பு.. அப்போதெல்லாம் இலவசக் கடித உறை இல்லை. சொந்த செலவில்தான் அனுப்ப வேண்டும்) அனுப்பி வைத்தோம்.
போட்டி நிறைவடைந்ததும், ஒரு நாள், சீனாவில் இலவசப் பயணம் மேற்கொள்ள எஸ்.செல்வம் அவர்களைத் தேர்வு செய்துள்ளோம் என எஸ்.சுந்தரன் வானொலி மூலமாக அறிவித்தார். முதலில் என்னால் நம்ப முடியவில்லை. 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்' என்பார்கள். ஆனால், அப்போது என் காதுகளை என்னால் நம்ப இயலவில்லை. இவ்வறிவிப்பு பற்றி என் குடும்பத்தினரிடமும் தெரிவிக்கவில்லை. அப்போது, தொலைபேசி வசதி இருந்ததா என்ன, என் தேர்வை பிற நண்பர்களிடம் உறுதி செய்து கொள்ள? மறுநாள் இரவு 7.30 மணி வரை காத்திருந்தேன்.
அப்போது, சவூதி அரேபியாவில் பணிபுரிந்த என் அண்ணன் அனுப்பிய SONY 2-in-1 என்னிடம் இருந்தது. அதைப் பயன்படுத்தி, ஒலிநாடாவில் என் பயண அறிவிப்பைப் பதிவு செய்தேன். பலமுறைக் கேட்டபின், சீனப் பயணத்திற்கு நான் தேர்வு செய்யப்பட்டது உண்மைதான் என்பதை புரிந்து கொண்டேன். என் அப்பா, அம்மா மற்றும் அண்ணனிடம் தெரிவித்தேன். அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிதான்.
அப்போது, என்னுடைய பயணத்திற்கான தேதி நிர்ணயம் செய்யப்பட்டபோதுதான், என்னிடம் பாஸ்போர்ட் இல்லையே என்ற எண்ணம் எழுந்தது. உடனடியாக பாஸ்போர்ட் வாங்குவதற்காக, சென்னை சாஸ்திரி பவன் சென்று விண்ணப்பித்தேன்.
எதற்கு சீனா போகிறீர்கள் என ஆயிரத்தெட்டு கேள்விகள்.. எல்லாவற்றையும் புரிய வைத்தேன். பிறகு Notarary Public-டம் சான்று வாங்கி வாருங்கள் என்றனர். செய்தேன். அடுத்தோ, உங்கள் மாவட்ட டி.எஸ்.பியிடம் சான்று வேண்டும் எனக் கோரினர். 30 நாட்களில் 17 முறை சென்னை 'சாஸ்திரி பவன்' சென்றும் பலன் ஏதுமில்லை. அப்போதெல்லாம் தொலைபேசி வசதி இல்லை. பாஸ்போர்ட்டை நான் பெற்றுவிட்டேனா இல்லையா என்பதை அறிய, நாள்தோறும், சீன வானொலியில், அறிவிப்பு ஒன்றை சுந்தரன் வெளியிடுவார். நாளை பகல் 2.00 மணிக்கு எஸ்.செல்வம் எங்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.. இப்படியாக அந்த அறிவிப்பு வெளிவரும். மறுநாள் பாண்டிச்சேரி அல்லது விழுப்புரம் பயணித்து, தொலைபேசி மூலம் எஸ்.சுந்தரனை தொடர்பு கொள்வேன். Stop Clock மூலம், அப்போது சீனாவிற்குப் பேச ஒரு விநாடிக்கு ஒரு ரூபாய். செலவு செய்து என்ன செய்ய? சீனாவில் நான் பயணம் செய்யும் நாளோ நெருங்கிக் கொண்டிருந்தது. பலவாறாக முயற்சி செய்தேன். ஏதோதோ சாக்குப் போக்கு கூறினர். இறுதி வரை என்னால், பாஸ்போர்ட் வாங்க இயலவில்லை.
இதற்கிடையில், மூத்த நேயர்கள் ஒரு சிலர் இருக்க, அவரை விட இளையவரான செல்வத்தை எவ்வாறு சீனப் பயணத்திற்குத் தேர்வு செய்யலாம் என ஒரு நேயர் வினவினார். அப்போது அந்நேயருக்கு கடிதம் மூலம் விளக்கிய எஸ்.சுந்தரன், நான் சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர், 3.2.1993 அன்று இடம்பெற்ற, 'கேள்வியும் பதிலும்' நிகழ்ச்சி மூலம், சீனப் பயணத்திற்காக, செல்வத்தை எதற்காகத் தேர்வு செய்தோம் என எஸ்.சுந்தரன் அவர்கள் விரிவாக விளக்கிக் கூறினார். அவர் அளித்த பதிலின் சுருக்கம் இதுதான்.. 1) சரியான விடைகளை அளித்து 100 மதிப்பெண் பெற்றார், 2) ஆயிரக்கணக்கில் வினாத்தாட்களை அச்சிட்டு, அவற்றை விநியோகித்து, நேயர்களிடமிருந்து திரட்டி அனுப்பினார், 3) அதிக அளவில் தரமான கடிதங்களை அனுப்புகிறார், 1992-ஆம் ஆண்டில் செல்வம்தான் அதிகக் கருத்துக் கடிதங்களை அனுப்பினார், 4) சீன வானொலி மீது உண்மையான பற்று கொண்டவர். நேயர் மன்றத்தை உருவாக்கியவர், நிகழ்ச்சிகள் பல தயார் செய்து அனுப்பியவர். இது பொருத்தமான தேர்வு என நேயர்கள் பலர் பாராட்டினர்.
சீனப் பயணத்திற்கான நேரமும் வந்துவிட்டது. நான் பாஸ்போர்ட் பெறாத நிலையில், என்னுடன் இணைந்து தேர்வு செய்யப்பட்ட இதர மொழிப்பிரிவின் நேயர்கள், சீனாவில் பயணம் செய்து முடித்தனர்.
பாஸ்போர்ட் பெறும் முயற்சியை நான் தொடர்ந்து கொண்டேயிருக்க, 1992-ஆம் ஆண்டு, ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத்தின் சார்பில், அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 7-வது கருத்தரங்கை விழுப்புரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. நண்பர்களுடன் இணைந்து கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கினேன்.
பாஸ்போர்ட் பெறுவதில் காலதாமதம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. பின், பெய்ஜிங்கிலுள்ள இந்தியத் தூதர் மூலம், சில முயற்சிகளை எஸ்.சுந்தரன் மேற்கொண்டார். நானும், அப்போதைய முதல்வருக்குக் கடிதம் எழுதினேன். முதல்வரின் தனிச்செயலர் திரு. கருப்பண்ணன், பாஸ்போர்ட் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார். இம்முயற்சிகளினால், அப்போது பாஸ்போர்ட் வழங்கும் அலுவலரான திரு. இரவி என்பவர் ஒருவழியாக எனக்கு பாஸ்போர்ட் வழங்கினார்.
உடன், விசா பெறும் முயற்சியில் இறங்கினேன். தொடர் வண்டி மூலம், புதுதில்லி நோக்கிப் பயணம் செய்தேன். 1992-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 6-ஆம் நாள், நான் பயணம் செய்த வண்டி, நாக்பூரை அடைந்தபோது, ரெயில் பெட்டிகள் கற்களால் தாக்கப்பட்டன. பெட்டிகளின் சன்னல்களை மூடுமாறு பயணிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. புதுதில்லியிலுள்ள பாபர் மசூதி அன்று இடிக்கப்பட்டதாகவும், எனவே பல இடங்களில் கலவரம் நடப்பதாகவும் கேள்விப்பட்டேன். மறுநாள் காலை, புதுதில்லியில் இறங்கியபோது, நகரமே வெறிச்சோடிப் போயிருந்தது. கடையடைப்புக் காரணமாக பொதுமக்கள் நடமாட்டமோ, போக்குவரத்தோ ஏதும் காணப்படவில்லை.
ஆயினும், சீனத் தூதரகத்திற்கு என்னை அழைத்துச் செல்ல, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஒப்புக் கொண்டார். அவரின் உதவியுடன் தூதரகம் சென்றேன். ஆனால், எல்லா வாயில்களும் அடைக்கப்பட்டிருந்தன. முதன்மை வாயிலுக்குச் சென்று, வெளியே பூட்டப்பட்டிருந்த முன்புற கேட்டிற்கு முன்னே நின்று, பலமுறைக் குரல் கொடுத்தேன். உள்ளே அமைக்கப்பட்டிருந்த மாளிகையின், மூடிப்பட்டிருந்த வாயிற்கதவைத் திறந்து ஒருவர் எட்டிப் பார்த்தார். பின்னர் அருகே வந்தார்.
விசா வேண்டும் என்றேன். எதற்காக என்றார். சீன வானொலி எனக்கு அனுப்பியிருந்த அழைப்பிதழைக் காட்டினேன். அய்யகோ.. அதில், விழா நடைபெறும் நாள் அக்டோபர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. விழா நாள் முடிந்துவிட்டது, எனவே, விசா கொடுக்க முடியாது என அவர் மறுத்தார். என்னுடைய சீனப் பயணத்திற்கு இத்தனைத் தடைகளா என மனம் நொந்து போனேன். அப்போது, அவரிடம் சீன வானொலி தமிழ்ப்பிரிவு தொலைபேசி எண்ணைக் கொடுத்து, சீன வானொலியுடன் தொடர்பு கொண்டு விசாரியுங்கள் எனக் கூறினேன். (பி.கு.. உரையாடல் அனைத்தும் ஆங்கில மொழியில்தான்). அப்போது, அவர், சீன வானொலியின் செய்தியாளர் ஒருவர் இங்கே இருக்கிறார், அவரை அழைத்து வருகிறேன் என்றார். உள்ளே போய் ஒருவரை அழைத்து வந்தார். மெல்லிய உடல்வாகு கொண்ட ஒருவர், என்னை நோக்கி மெல்ல மெல்ல நடந்து வந்தபோது, இழந்த நம்பிக்கை எல்லாம் என்னுள் துளிர்த்தெழுந்தது. அவர்தான் வங்பௌசி. சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் தலைவராக, சுந்தரனுக்கு முன்பு பணியாற்றியவர். தெற்காசிய மொழிப் பிரிவுத் தலைவராக, 1991-ஆம் ஆண்டு என் வீட்டிற்கு வந்தவர். என்னைப் பார்த்ததும், அவர் என்னிடம் முதலில் ஏதும் பேசவில்லை. கட்டியணைத்துக் கொண்டார். பின்னர், எல்லாவற்றையும் அறிந்து கொண்டு, விசா பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். நாளை வாருங்கள் விசா பெறலாம் என்றார். ஆனால், அன்று இரவே சென்னை திரும்ப முன்பதிவு செய்யப்பட்ட தொடர்வண்டி பயணச் சீட்டினை அவரிடம் காட்டினேன். மாலை வாருங்கள், விசா பெற்றுக் கொள்ளலாம் என்றார். புதுதில்லியில் கடையடைப்பு என்பதால் கடைகள் ஏதும் திறக்கப்படவில்லை. சீனத் தூதரகம் அருகில் இருந்த நேரு பூங்காவில் (இதைக் காதலர்கள் பூங்கா என்றும் கூறுவார்கள்) பசியுடன் பகல் பொழுதைக் கழித்துவிட்டு, மாலையில் விசா பெற்று கொண்டு வீடு திரும்பினேன்.