சீனப் பயணத்திற்கான விமானச் சீட்டுக்களை பதிவு செய்துவிட்டு, அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 7-வது கருத்தரங்கிற்கான பணிகளைக் கவனிக்கத் துவங்கினேன். திட்டமிட்டபடி அக்கருத்தரங்கில், சீன வானொலியில் பணிபுரிந்த முனைவர் ந.கடிகாசலம் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், உரிய நேரத்தில், சீனாவிலிருந்து திரும்ப இயலாததால், அவரால், கருத்தரங்கில் கலந்து கொள்ள இயலவில்லை.
விழுப்புரம் பேருந்து நிலையத்தின் எதிரில் அமைந்துள்ள ஹோட்டல் ஆனந்தாவில், 26.12.1992 அன்று நடைபெற்ற கருத்தரங்கில், அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் பொறுப்பாளர்களான, திருவாளர்கள் ஒய்.எஸ்.பாலு, பல்லவி.கே.பரமசிவன், ஆர்.சின்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மறுநாள் நான் சீனாவிற்கு புறப்பட வேண்டும். எனவே, கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரும், என்னுடைய சீனப் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். கருத்தரங்கு நிறைவுற்றதும், அந்த ஹோட்டலின் கீழ்த்தளத்திலிருந்த கட்டணத் தொலைபேசி மூலம், சீன வானொலியைத் தொடர்பு கொண்டேன். ஏதோவொரு இளம்பெண் பணியாளர் தொலைபேசியை மறுமுனையில் எடுத்தார். மறுநாள், நான் சீனாவிற்கு புறப்படுவதாக தெரிவித்தேன். ஆனால், அப்பணியாளருக்கு தமிழ் மொழி சரியாகப் புரிந்து கொள்ள இயலாது என்பது அப்போது எனக்குத் தெரியாது.
27.12.1992 அன்று மாலை 5.20 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டேன். வழியில், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் முழு இரவும் காத்திருக்க நேரிட்டது. இரவு முழுக்க தூக்கம் வரவில்லை. உலக நாடுகளின் பல்வேறு வண்ணங்களிலான விமானங்களை வேடிக்கைப் பார்ப்பதிலேயே இரவு நேரம் கழிந்தது. மறுநாள் காலையில் புறப்பட்டு, 28.12.1992 இரவு பெய்ஜிங்கை அடைந்தேன். அப்போது குளிர்காலம் என்று எனக்குத் தெரியும். நமக்கெல்லாம் குளிர் என்றால் மார்கழிக் குளிர்தானே.. சமாளித்துக் கொள்ளலாம் என ஒரேயொரு ஸ்வெட்டர் மட்டும் எடுத்துச் சென்றேன். பெய்ஜிங்கை நெருங்கும்போது, என்னுடன் பயணம் செய்த பிற பயணிகள் (அனைவரும் சீனர்கள்தான்) அவசரம் அவசரமாக கனமான, குளிரைத் தாங்கிக் கொள்ளக் கூடிய கம்பளி ஆடைகளை அணியத் துவங்கினர். அவர்களை வேடிக்கைப் பார்த்த நானும், வேண்டா வெறுப்பாக, நான் எடுத்துச் சென்றிருந்த ஸ்வெட்டரை அணிந்து கொண்டேன்.
விமானம் தரையிறங்கியது. வெளியே வந்தேன். என்னை வரவேற்க வந்தவர்களைத் தேடினேன். எவரையும் காணாம். என்னுடன் பயணம் செய்தவர்கள் அனைவரும் வெளியேறியாகிவிட்டது. நான் மட்டும் சுற்றிச் சுற்றி வந்தேன். என்ன செய்வது எனப் புரியவில்லை. சீன வானொலியைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள என்னிடம் சீன நாணயம் ஏதும் இல்லை. பின்பு, விமான நிலையப் பணியாளர் ஒருவரிடம் என் நிலைமையை விளக்கிக் கூறினேன். நாணயம் ஒன்றையளித்தார். அதன் உதவியுடன், சீன வானொலியைத் தொடர்பு கொண்டு பேசினேன். அந்தப் பக்கம் சுந்தரன் தொலைபேசியை எடுத்தார்.
வணக்கம், நான் செல்வம் பேசுகிறேன் என்றேன். வணக்கம் செல்வம், எங்கிருந்து பேசுகிறீர்கள், பாண்டிச்சேரியிலிருந்தா அல்லது விழுப்புரத்திலிருந்தா? என அவர் என்னைக் கேட்டார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அதிர்ச்சியுடன், உங்கள் பெய்ஜிங்கிலிருந்துதான் பேசுகிறேன் என்றேன். என்னைவிட, அவர் அப்போது அதிக அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
நேற்றைய நிகழ்ச்சியை நீங்கள் கேட்கவில்லையா? என்றார். கருத்தரங்குப் பணிகளை முடித்து, ஊர் திரும்பியதால், கேட்கவில்லையே என்றேன். அதாவது, நேற்றைய ஒலிபரப்பில், தற்போது குளிர்காலம் கடுமையாக இருப்பதால், பயணம் செய்ய வேண்டாம் எனவும், பிறகு பயணம் மேற்கொள்ளலாம் எனவும் சுந்தரன் அறிவித்திருந்தார். ஆனாலும் என்ன செய்ய? விதியாகப்பட்டது வலியது, அதை யாரும் வெல்ல முடியாது. நிலைமையை அவரிடம் விளக்கிக் கூறினேன்.
ஆனாலும், எனக்கான சோதனை தொடர்ந்து கொண்டேயிருந்தது. என்னுடன் தேர்வு செய்யப்பட்ட பிற நாடுகளின் நேயர்கள் ஏற்கனவே பயணத்தை முடித்திருக்க, எனக்கு மட்டும் தனியாக பயண ஏற்பாடுகளை தனியே செய்ய வேண்டியிருந்தது. என்னுடைய போதாத நேரம், அப்போது, சீன வானொலி இயக்குநர், ஷாங்காய் நகரத்தில் இருந்தார். அவரிடமும் அனுமதி பெற வேண்டியிருந்தது.
எனவே, விமான நிலையத்தில் காத்திருங்கள் என சுந்தரன் கூறினார். காத்திருந்தேன். சிறிது நேரத்தில், கடுங்குளிரால் என் கைவிரல்கள் கிடுகிடுக்கத் துவங்கின. அப்போது, ரஷ்யாவில் வாழ்ந்த காஸ்டரிகா நாட்டைச் சேர்ந்த ஒருவர், தம் நண்பரைச் சந்திக்க பெய்ஜிங் வந்திருந்தார். என்னுடைய நிலைமையைக் கவனித்த அவர், ரஷ்யாவில், இத்தகையக் குளிர் தமக்கு பழக்கம் எனக் கூறி, தாம் அணிந்திருந்த நீண்ட, தடித்த கம்பளி ஆடையை எனக்கு அணிவித்தார். சுந்தரன் வரும்வரை என்னுடன் உரையாடிக் கொண்டுமிருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பின், தமிழ்ப்பிரிவுத் தலைவர் சுந்தரனும், அப்போது விளையாட்டுச் செய்திகளைத் தயார் செய்த மாஹோங் என்பவரும் வந்தனர். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த என்னை காரில் அள்ளிப் போட்டுக் கொண்டனர். சாப்பிட்டீர்களா என்றனர். பசியாயினும், விமானத்தில் சாப்பிட்ட உணவு போதுமானது எனப் பொய் கூறினேன். காரணம், கடுங்குளிரில், காரிலிருந்து வெளியே வர விரும்பவில்லை.
அன்று இரவு என்னை விடுதி ஒன்றில் தங்க வைத்தார்கள். மிகப் பெரிய அறையில் தன்னந்தனியனாகத் தங்கினேன். மறுநாள் முதல், எஸ்.சுந்தரன் அவர்களுடன், பெய்ஜிங்கின் அனைத்து முக்கிய இடங்களையும் சுற்றிப் பார்த்தேன். பயணத்தின்போது, 1993 புத்தாண்டு நாளை முன்னிட்டு, 31.12.1922 அன்று, சீன செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் தலைமையில், அனைத்து மொழிப் பிரிவுகளிலும் பணியாற்றும் சிறப்பு நிபுணர்களுக்கு மாபெரும் விருந்தளிக்கப்பட்டது. அவ்விருந்தில் கலந்து கொண்டபோது, சீன வானொலி தமிழ்ப்பிரிவில் பணியாற்றும் சிறப்பு நிபுணர் முனைவர் ந.கடிகாசலம் அவர்களை முதன்முதலாகச் சந்தித்து மகிழ்ந்தேன். உடன் சிங்கள நிபுணரும் இருந்தார். King of King என்ற வார்த்தையின் பொருள் என்ன என சுந்தரன் வினவ, அவர்கள் அளித்த பதில் இப்போதும் நினைவில் இருக்கிறது.
அப்போது, மிகக் கடுமையான குளிர் என்றபோதிலும், பல ஆடைகளை அணிந்து, இப்பிரச்னையைச் சமாளித்தேன். சீனாவின் அனைத்து உணவு வகைகளையும் உண்டு மகிழ்ந்தேன். சீனப் பெருஞ்சுவர், சொர்க்கக் கோயில், அரண்மனை அருங்காட்சியகம், கோடைக் கால மாளிகை, லாமாக் கோயில் என அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்தேன். எல்லா இடங்களுக்கும் என்னுடன் சுந்தரன் அவர்கள் வந்தார். என்னுடைய பயணத்தின்போது, அப்போதைய துணைத் தலைவர் தி.கலையரசி அவர்கள் உடல்நலமின்றி விடுமுறையில் இருந்தார். எனவே, அவரை, தமிழ்ப்பிரிவு அலுவலகத்தில் சந்திக்க இயலாமல் போனாலும் கூட, தம் கணவர் மற்றும் மகளுடன், நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்து, நான் சாப்பிடுவதற்கு பால்பவுடர் மற்றும் காபித் தூள் ஆகியவற்றை வழங்கினார்.
பயணத்தின்போது, சீன வானொலி தமிழ்ப்பிரிவு அலுவலகத்தில், தமிழ்ப்பிரிவுப் பணியாளர்கள் அனைவருடன் இணைந்து, சிறப்பு நிகழ்ச்சி ஒன்றைப் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்து. ஒலிப்பதிவு அறைக்குச் செல்லாமல், அலுவலக அறையிலேயே, எஸ்.சுந்தரன், ருசா, பொற்செல்வி, ஹருமினா, தேவி, சாங் சுன் ஜெ மற்றும் பாஃங்யாசின் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலளிக்க, அந்நிகழ்ச்சி முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு, பின்னாட்களில், சீன வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
பத்து நாட்கள் மேற்கொண்ட பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட பின்னர், மேலும் சில நாட்கள் பயணத்தை நீட்டிக்கலாமா என எஸ்.சுந்தரன் என்னிடம் கேட்டார். கடுங்குளிர் காரணமாக, மேலும் சில நாட்கள் என்னால் அங்கே தங்கியிருக்க இயலவில்லை. எனவே, என்னுடைய பயணத்தை உரிய நேரத்தில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினேன். பயணத்தின் கடைசி நாளன்று, என்னுடன் விடுதி அறையில் எஸ்.சுந்தரன் ஒன்றாகத் தங்கினார். இரவு முழுக்க நாங்கள் நிறைய பேசினோம்.
பயணத்திற்குப் பின், ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத்தின் செயலாளராக நான் தேர்வு செய்யப்பட்டேன். பின்னர், 1993-ஆம் ஆண்டு, அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் பொருளாளராகத் தேர்வானேன். சீன வானொலி கேட்கும் நேயர்கள், ஒவ்வொருவராக எனக்கு நண்பர்களாக மாறினர்.