• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நானும் சீன வானொலியும்
  2013-06-19 18:00:29  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வானொலி மன்றம் என்ற இதழை தயார் செய்து, நேயர்களுக்கு இலவசமாகத் தயார் செய்து அனுப்பி வைத்தோம். இப்பணிக்கு, நண்பர் பாலகுமார் பெரும் உதவி வழங்கினார். மூன்று இதழ்கள் மட்டுமே வெளிவந்தன. இணையம் மூலம் தகவல்களை வெளியிடுவது எளிது மற்றும் விரைவானது என்பதால், பிறகு, இவ்விதழ் வெளியிடுப்படுவது நிறுத்தப்பட்டது.

சீன வானொலி தொடர்பான விவரங்களை நேயர்களுக்கும், பிறருக்கும் தெரிவிக்கும் வகையில், எனது சொந்த செலவில், www.critamilclub.com என்னும் இணையப் பக்கம் ஒன்றை நிறுவினேன். இதுவரையில், இப்பக்கத்தில் நான்கு கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், சீன வானொலியைப் பரப்புரை செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினேன். குறிப்பாக, நேயர்களின் திருமண விழாக்களை இதற்கு நான் பயன்படுத்திக் கொண்டேன். சீன வானொலியிடமிருந்து வரப்பெற்ற பரிசுப் பொருட்களைக் கொண்டு, 1995-ஆம் ஆண்டில் நடைபெற்ற திரு.இராமபத்திரன் திருமண விழாவில், கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்தேன். அன்றி, எனது திருமணம், பனப்பாக்கம் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் திருமணம் மற்றும் திரு.எஸ்.பாண்டியராஜனின் மகள் எஸ்.பி.லதாவின் திருமணம் போன்றவற்றில் சீன வானொலி தொடர்பான தகவல்களை அச்சிட்டு, திருமணத்தில் கலந்து கொண்டவர்களிடம் விநியோகித்தேன்.

சீன வானொலியிலிருந்து பாண்டிச்சேரிக்கு தமிழ்மொழி பயில, பணியாளர்கள் வருவார்கள் என அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நண்பர்களான கலைமணி, தேன்மொழி, மோகன் மற்றும் ஜெயா ஆகியோர் பாண்டிச்சேரியில் தங்கியிருந்தபோது, நான் மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்தினர் அனைவருமே, அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்களுக்கு முழுஉதவியை வழங்கினோம். இதை நேயர்களுக்கு வார்த்தைகளால் புரிய வைக்க இயலாது. ஆனால், சீன நண்பர்களுக்கு இது நன்றாகத் தெரியும்.

நேர்மையான முறையில் சீன வானொலிக்குக் கடிதம் எழுதுவதில் நான் பெருமை கொள்கிறேன். சீன வானொலித் தரப்பை மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் மட்டும் நான் ஒருபோதும் கடிதம் எழுதியது கிடையாது. நிகழ்ச்சியில் குறை தெரிந்தால், உடனடியாக அதை நான் சுட்டிக்காட்டுவேன். பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியதன் மூலமாக, சீன வானொலியின் தரம் உயர மறைமுகமாகப் பாடுபட்டுள்ளேன். நான் நான்கு பட்டங்களைப் பெற்றிருக்கிறேன். இயற்பியலில் இளமறிவியல் பட்டமும், வரலாறு, தமிழ் இலக்கியம் மற்றும் அரசியல் அறிவியல் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டமும் பெற்றிருக்கிறேன். ஆயிரக்கணக்கான நூல்களை படித்து முடித்திருக்கிறேன். என்னுடைய வீட்டில் ஆயிரக்கணக்கான நூல்கள் உண்டு. 1984-ஆம் ஆண்டிலேயே தட்டச்சில் உயர்நிலைத் தேர்ச்சி பெற்ற என்னால் நிமிடத்திற்கு பல பத்து வார்த்தைகளைப் பிழையின்றி தட்டச்சு செய்ய இயலும். இவற்றையெல்லாம் இங்கே சுட்டிக்காட்டக் காரணம், நான் பெற்ற கல்வியறிவு மற்றும் படிப்பறிவு அனைத்தையும் பயன்படுத்தி, நன்றாக யோசித்து, சீன வானொலிக்குக் கடிதம் எழுதுகிறேன். என்னுடைய கருத்துக் கடிதங்கள் எத்தகைய தரத்தில் இருக்கும் என்பது சீன வானொலியின் அனைத்துத் தலைமுறைப் பணியாளர்களுக்கும் தெரியும்.

1990-களில், சில ஆண்டுகள், சீன வானொலி தமிழ்ப் பிரிவில், சிறப்பு நிபுணர் எவரும் இல்லை. அப்போது, சீன வானொலிக்கு உதவி செய்யும் வகையில், கட்டுரைகளை மொழிபெயர்த்து அனுப்ப விருப்பம் தெரிவித்தேன். அப்போதைய தமிழ்ப்பிரிவுத் தலைவர் எஸ்.சுந்தரன் அவர்கள், என்னுடைய வேண்டுகோளுக்கு இசைவு தெரிவித்தார். சீன வானொலிக்கு எனக்கு அனுப்பிய ஆங்கிலப் பத்திரிகைகளான China Today, Beijing Review மற்றும் China Pictorial ஆகிய இதழ்களில் வெளிவரும் சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்து, தமிழில் மொழிபெயர்த்து அனுப்பினேன். நான் அனுப்பி வைத்த பல கட்டுரைகள், ஒலிபரப்பில் பயன்படுத்தப்பட்டன. ஒரு சில எடுத்துக்காட்டுக்கள்.

1993-ஆம் ஆண்டு.. சீனாவில் குழந்தையில்லாத குடும்பங்கள் (மக்கள் சீனம் நாள்- 9.4.1994), சீனப் பெருஞ்சுவரும் அதன் புணரமைப்புப் பணியும் (மக்கள் சீனம்- 22.10.1994), பழைய போதலா மாளிகையும், நவீன தொழில் நுட்பமும் (அறிவியல் உலகம்- 5.11.1994), சென்ஷென் சிறப்பு பொருளாதாரப் பிரதேசம் (மக்கள் சீனம்- 12.11.1994), வறுமை நிலையை அகற்றிவிட்ட மலைப்பிரதேசங்கள் (மக்கள் சீனம்- 19.11.1994), நைட்டிங்கேல் விருதுபெற்ற அம்மையார் (சீன மகளிர்- 25.11.1994)

1994-ஆம் ஆண்டு.. சீனாவின் இருப்புப்பாதையின் வளர்ச்சி (சிறப்புக்கட்டுரை- 1.3.1995), புகழ்பெற்ற சீன நீச்சல் வீராங்கனை லீயோசின் (சீன மகளிர் – 12.5.1995), சீனாவின் லியாவ் தேசிய சிறுபான்மை இனம் (சீனாவில் இன்பப் பயணம்- 19.7.1995), வடமேற்கு சீனாவின் லாங்சோ நகரம் (சீனாவில் இன்பப் பயணம் – 9.8.1995), பெண் மருத்துவரின் மருத்துவத் தொண்டு (சீன மகளிர்- 8.9.1995).

1996-ஆம் ஆண்டு.. திபெத் சுகாதார முன்னேற்றம் (சிறப்புக் கட்டுரை நாள்.. 11.3.1996), மறக்கப்பட்ட நகரமும் அதன் பாதுகாப்பும் (சிறப்புக் கட்டுரை- 6.5.1996), மலர்ச்சோலை (9.5.1996), நீங்களே தொலைநோக்கி செய்யலாம் (அறிவியல் உலகம்-13.7.1996),

1997-ஆம் ஆண்டு.. சீனாவின் முதலாவது பெண் விமானிகள் படைப் பிரிவு (சீன மகளிர்- 3.1.1997), பைத்திய நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சீன வைத்தியர் (அறிவியல் உலகம்- 11.1.1997), மலர்ச்சோலை (13.3.1997).

நான் மொழிபெயர்த்த கட்டுரைகளை மூத்த பணியாளர்களான எஸ்.சுந்தரன், சாங்சுங்ஜெ, தேவி, ஹருமினா மற்றும் கலையரசி அவர்கள் வாசித்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன். சீன வானொலிக்காக, பல கட்டுரைகளை நான் மொழிபெயர்த்த விவரத்தை இப்போதுதான் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றேன்.

1990-களில், சீன வானொலி, திங்கள்தோறும், திங்கள் வினா-

விடைப்போட்டி ஒன்றை நடத்தும். அதில், 3 வினாக்கள் கேட்கப்படும். ஒரு திங்கள் கால நிகழ்ச்சிகளை முழுமையாகக் கேட்டிருந்தால்தான், அக்கேள்விகளுக்கு சரியான விடையளிக்க முடியும். அதற்காகவே, நிகழ்ச்சிகளை நாங்கள் கவனமுடன் கேட்டுக் குறிப்பு எடுப்போம். ஓராண்டின், 12 திங்கள் வினா-விடைப் போட்டிகளுக்கும் சரியான விடையளித்தவர், முதலில் கடலூர் துறைமுகம் செ.கதிர்காமநாதன் மட்டுமே. பிறகு, அப்பட்டியல், எஸ்.பாண்டியராஜன், எஸ்.ராமபத்திரன் ஆகியோருடன் நானும் இணைந்தேன். திங்கள் வினா-விடைப் போட்டி அறிவிக்கப்பட்டதுமே, பல நேயர்கள், உடனே எனக்கு, விடைகள் என்ன எனக் கேட்டு கடிதம் எழுதுவார்கள். அவற்றைப் பார்க்கும்போது, வேடிக்கையாக இருக்கும். நிகழ்ச்சிகளைக் கேட்காமல், விடைகளை எழுதி பரிசுப் பொருளை மட்டும் பெற்றுக் கொள்ள இவர்கள் ஏன் முனைகிறார்கள் என எண்ணத் தோன்றும்.

20. இன்று சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு முன்னணி மொழிப்பிரிவுகளுள் ஒன்றாகிவிட்டது. ஆனால், சீன வானொலியின் உயர்வுக்காக முன்னணி நேயர்களான நாங்கள் மிகவும் கடுமையாகப் பாடுபட்டோம். எடுத்துக்காட்டாக, 1992-ஆம் ஆண்டில் 79615 கடிதங்களைப் பெற்று தமிழ்ப்பிரிவு முதலிடம் பெற்றது. 54832 கடிதங்களைப் பெற்று உருதுப்பிரிவு இரண்டாவது இடத்தையும், 33013 கடிதங்களைப் பெற்ற வங்கமொழிப் பிரிவு மூன்றாவது இடத்தையும் பெற்றது. இக்கட்டுரையைப் பயன்படுத்தி, சீன வானொலியின் உயர்வுக்காக பாடுபட்ட அனைத்து நேயர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

21. 2011-ஆம் ஆண்டு, சீன வானொலியின் 61 மொழியின் ஒலிபரப்புக்களைச் சேர்ந்த, பல்வேறு நாடுகளின், ஆயிரக்கணக்கான மன்றங்களிலிருந்து, சிறந்த பத்து நேயர் மன்றங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் ஒன்றாக, அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றமும் இடம்பெற்றது, மன்றப் பணிகளில் கிடைத்த மைல்கல் சாதனையாகும். அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவராக நான் பணியாற்றிய காலத்தில், இப்பெருமை கிடைத்தை எண்ணி மகிழ்கிறேன்.

22. 1990-களின் தொடக்கத்தில் பார்வதி என்ற பணியாளர், தமிழ்மொழியை உச்சரிப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர். தமது உச்சரிப்புத் திறமையால், குறுகிய காலத்திலேயே முக்கியக் கட்டுரைகளை வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றார். தொடர்ந்து, 1994, 95, 96-ஆம் ஆண்டுகளில், மாலதி என்ற அறிவிப்பாளர், தமிழ் மொழியைத் திறம்பட வாசித்தார். வானொலியில் பணியாற்றிய குறுகிய காலத்திற்குள்ளேயே செய்திகளை வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பிறகு, விஜயலட்சுமி. மலர்ச்சோலை உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை வழங்கிய இவர், தமிழகத்திலும் பயணம் மேற்கொண்டார். இசை நிகழ்ச்சி மூலம், திலகவதி பல நேயர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார். ஆனால், இந்நால்வரும், தம் சொந்தக் காரணங்களுக்காக, தமிழ்ப்பிரிவை விட்டு விலகினர். ஆயினும், பல்வேறு சிரமங்களுக்கிடையில், இவர்கள் கற்ற தமிழ்மொழி ஆற்றல் வீணாகிவிட்டதே என அவ்வப்போது எண்ணி வருந்துவதுண்டு.

23. சீன வானொலி தமிழ்ப்பிரிவுடன் தொடர்பு கொண்டிருந்த அதே வேளையில், ஆங்கில மொழிப் பிரிவிற்கும் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்தேன். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் பொன் விழா ஆண்டுக் கட்டுரையில், ஆங்கில வானொலியைப் பற்றிக் குறிப்பிடுவதை நான் தவிர்க்க விரும்பவில்லை. ஏனெனில், ஆங்கில மொழிப் பிரிவின் சிறந்த நேயராகவும் நான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். 2009-ஆம் ஆண்டின் சீனப் பயணத்தின்போது, நண்பர் வாணி அவர்களின் உதவியுடன், ஆங்கில மொழிப்பிரிவுக்கும் சென்று நண்பர்களைச் சந்தித்து மகிழ்ந்தேன். நேயர் கடிதங்களைக் கையாளும், Ying Lian குழுவினரைச் சந்தித்து அளவளாவினேன். செல்வம் என வாணி அறிமுகம் செய்தபோதே, எங்களுக்கு அதிகக் கடிதம் எழுதும் நேயர் என அக்குழுவினர் தெரிவித்தனர்.

24. 2011-ஆம் ஆண்டு, சீனாவில் பயணம் செய்தபோது, தமிழ்மொழியில் நூல் ஒன்றை வெளியிடும் விருப்பத்தை நண்பர் கலைமகள் தெரிவித்தார். பின்னர், நான் இந்தியா திரும்பிய பின், நூலில் இடம்பெற வேண்டிய கட்டுரைகளை அவர் அனுப்பினார். கட்டுரைகளை சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் முன்னாள் நிபுணர் ந.கடிகாசலம் அவர்கள் திருத்தம் செய்தார். பின்னர், அச்சுக்குச் செல்லும்போது, கட்டுரைகள் யாவும் நிகழ்காலத்தில் இருப்பதாக, நூல் வெளியீட்டாளர் கூறினார். பின்னர், கட்டுரைகள் அனைத்தையும் இறந்த காலத்திற்கு மாற்றம் செய்தேன். பல்வேறு தொடர் ஆலோசனைக்குப் பிறகு, சிறந்த நூல் தேர்வில் கலந்து கொள்ளும் வகையில், பக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ISBN எண் பெறப்பட்டதால், இந்நூல், அதிகாரபூர்வ வெளியீட்டு நூலாகவும் மாறியது. கலைமகளுடன் தொடர்ந்து விவாதித்து, நூலில் இடம்பெற வேண்டிய பல்வேறு நிழற்படங்கள் தேர்வு செய்யப்பட்டன. 'சீனாவில் இன்ப உலா' என்னும் தலைப்பிலான இந்நூலை கௌதம் பதிப்பகம் வெளியிட்டது. தமிழகத்தில், இந்நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏராளமான செய்தி ஊடகங்கள், இந்நூலைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டன.

25. 2005 மற்றும் 2006 ஆகிய இரு ஆண்டுகளில், ஜெயங்கொண்டம் நகரில், சர்வதேச வானொலி நேயர்களின் சங்கம விழாவை, நண்பர் உத்திரக்குடி சு.கலைவாணன் இராதிகா அவர்கள் ஏற்பாடு செய்து நடத்தினார். சீன வானொலியின் சார்பாக, இவ்விரு விழாக்களிலும் கலந்து கொண்டேன். பிற வானொலிகள் பற்றி, அவ்வானொலியில் பணியாற்றும் பணியாளர்கள் பேச, சீன வானொலியை நான் அறிமுகம் செய்து வைத்தேன்.

26. திருச்சியைச் சேர்ந்த மாணவர் குழுவினர், Scatting மூலமாக பாண்டிச்சேரிக்கு வருகின்றனர் எனவும், அவர்களை வரவேற்று உபசரிக்குமாறும், நண்பர் திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரன் அவர்கள் கேட்டுக் கொண்டார். எனவே, பாண்டிச்சேரியின் மேற்கு எல்லைப்புற நகரான வில்லியனூர் சென்று, நண்பர்கள் பாலக்குமார் மற்றும் இராஜகோபால் ஆகியோருடன் வரவேற்றேன். அவர்களுடன் பாண்டிச்சேரி கடற்கரைப் பகுதிக்குச் சென்றோம். மாலை நேரம் என்பதால், அப்போது கடற்கரையில் நல்ல கூட்டம் இருந்தது. அக்கூட்டத்தினரிடையே, சீன வானொலியின் அதிகாரபூர்வ கொடியேந்தி, சீன வானொலி பற்றிய பரப்புரையை மேற்கொண்டோம்.

27. சீன வானொலியுடனான தொடர்பில், சீன வானொலி தமிழ்ப்பிரிவைக் கடந்தும் நண்பர்கள் சிலரை நான் பெற்றேன். அவர்களில் ஒருவர், ஆப்கன் மொழிப் பிரிவின் சிறப்பு நிபுணர் ஆயாஸ் ஆவார். 2011-ஆம் ஆண்டில், சீனாவில் பயணம் செய்ய இருப்பதை நண்பர் கிளிட்டஸ் மூலம் அறிந்திருந்த அவர், தம் தாய்நாட்டிலிருந்து, ஆப்கன் பாணியிலான ஆடை ஒன்றைத் தைத்து எடுத்து வந்திருந்தார். பயணத்தின்போது, அவரைச் சந்தித்த வேளையில், அந்த ஆடையை எனக்கு வழங்கி மகிழ்ந்தார். ஆப்கன் ஆடையை அணிந்து கொண்டு, அவருடன் இணைந்து நிழற்படம் எடுத்துக் கொண்டதை எப்போதும் என்னால் மறக்கவியலாது.

29. இணைய தளம் வரும் முன்பு, என் கருத்துக்களை சீன வானொலிக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில், பேக்ஸை நான் பயன்படுத்தினேன். அவ்வாறு நான் அனுப்பிய நூற்றுக்கணக்கான பேக்ஸ் செய்திகளில் முக்கியமானது, வெளிநாட்டுத் திறப்பு மற்றும் சீர்திருத்தக் கொள்கையை 1979-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்த சீன அரசுத் தலைவர் டெங்சியோபிங்கின் மரணமாகும். 1997-ல் இவர் மரணமடைந்தவுடன், உடனடியாக இரங்கல் தெரிவித்து, பேக்ஸ் செய்தி ஒன்றை நான் சீன வானொலிக்கு அனுப்பினேன். நான் அனுப்பிய பேக்ஸ் செய்திகள் அனைத்தையும் தொகுத்து, இன்றளவும் வைத்திருக்கின்றேன்.

30. 24.4.1994 அன்று என்னுடைய திருமணம் நடைபெற்றது. என்னுடைய திருமணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்து, சீன வானொலியின் அப்போதைய இயக்குநர், சீனாவிலிருந்து வாழ்த்துத் தந்தி ஒன்றை அனுப்பினார். அக்காலத்தில், சீன வானொலியிடமிருந்து வாழ்த்துத் தந்தி பெற்ற ஒரே நேயர் நான் மட்டுமே என்பதை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கின்றேன். அன்றி, என்னுடைய திருமணத்திற்கும் சீன வானொலி, தனியே இரு வாழ்த்துக் கடிதங்களை அனுப்பியிருந்தது. வாழ்த்துக் கடிதம் மட்டுமல்ல, என் இளைய தங்கை கீதா மரணித்தபோது, சீன வானொலி எனக்கு இரங்கல் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்தது.

31. கட்டுரையை நிறைவு செய்யும் வேளையில், திடீரென ஒருவர் என் நினைவில் எழுகிறார். சாங்சியுலியன் அம்மையார். தம் பணிக்காலம் முழுதும் சீன வானொலியில் பணி செய்திருந்தாலும் கூட, அறிவிப்பாளராக, இவரின் குரல் ஒருபோதும் சீன வானொலியில் வந்தது இல்லை. இறுதிவரை, மொழிபெயர்ப்பாளராகவே பணியாற்றினார். எனக்கு ஏராளமான கடிதங்களை தம் கைப்பட எழுதியிருக்கிறார். பிள்ளைப்பேறு இல்லாமல் நான் தவித்தபோது, சீனாவிற்கு வாருங்கள், சீனப் பாரம்பரிய மருந்து மூலம் இப்பிரச்னையைத் தீர்க்கலாம் என எனக்குப் பல கடிதங்கள் எழுதினார். 1992-ல், சீனப் பயணத்தின்போது இவரைச் சந்தித்தேன். பிறகு, 2002-ல் இவர் தமிழகப் பயணம் மேற்கொண்டபோது மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னை உணவு விடுதியில் சாப்பிடும்போது, அவருக்கு பல் பிரச்னை. எனவே, அவருக்கான உணவுகளை எடுத்து, என் வாயில் ஊட்டிய நிகழ்வை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.

32. சீன வானொலி தமிழ்ப்பிரிவு எனக்கு இனிய, உண்மையான, என் நலனுக்கு எதிரான கருத்துக்களை எப்போதும் நினைத்திராத நண்பர்கள் சிலரை உருவாக்கித் தந்தது. முதலில் விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன். சீன வானொலியின் மீது அக்கறை கொண்ட நேயர்களில், எப்போதும் இவரையே முதலிடத்தில் இருப்பவராக நான் மதிப்பிடுகிறேன். தனிப்பட்ட வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்கொண்டாலும், அவற்றால், சீன வானொலியுடனான தொடர்பைக் குறைத்துக் கொள்ளாதவர். அடுத்து கிளிட்டஸ். என்னவென்று சொல்வது? சீன வானொலியின் சிறப்பு நிபுணர் என எவ்விதப் பந்தாவும் இன்றி, நெருங்கிப் பழகியவர். சீனாவில் பயணம் மேற்கொண்டபோது, எங்களை மிகவும் நன்றாகக் கவனித்துக் கொண்டவர். அழைத்தபோதெல்லாம், நேயர் மன்றக் கூட்டங்களில் கலந்து கொண்டவர். அடுத்து, கிளிட்டஸ்-பாண்டியன்-செல்வம் மூவரும் இணைந்தால், அங்கே உலகமே மறந்துபோகும். நல்ல நட்பிற்கு என் இனிய நன்றி.

33. பொன்விழா ஆண்டில், ஒரு சாதாரண நேயராக என்னை நினைத்துக் கொண்டு கடந்த காலங்களை எண்ணும்போது, என் வானொலி வாழ்க்கையில் என்னுடன் ஒத்துழைத்த, நண்பர்களை இங்கே நான் குறிப்பிட்டேயாக வேண்டும். விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன், வளவனூர் வி.புதூர் எஸ்.இராமபத்திரன், கடலூர் துறைமுகம் செ.கதிர்காமநாதன், திருச்சி ந.குபேந்திரன், பனப்பாக்கம் இரா.கிருஷ்ணமூர்த்தி, வாதானூர் மு.விநாயகமூர்த்தி, திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரன், பாண்டிச்சேரி ஜி.இராஜகோபால், என்.பாலக்குமார், எஸ்.வி.குரு, ஆனத்தூர் தொட்டிமேடு எல்.திருமலைவாசன், பூண்டி கே.குப்புசாமி, நெல்லைத்திருத்து எஸ்.மகாலிங்கம், உளுந்தூர்பேட்டை கே.அப்துல் ஜாமி ஆலம், மங்கலம்பேட்டை சையத் காதர், நாகர்கோயில் பிரின்ஸ் இராபர்ட் சிங், சேலம் ஆர்.செந்தாமரை, தனம், இளங்கோவன், உத்திரக்குடி சு.கலைவாணன் இராதிகா, ஆரணி ஜெ.அண்ணாமலை, செஞ்சி கே.ராஜாதேசிங்கு, மறைமலைநகர் சி.மல்லிகாதேவி, நெய்வேலி ஏ.எம்.சுப்பிரமணியன், த.முருங்கப்பட்டி ப.ஆனந்த், சின்னவளையம் பி.மாரிமுத்து, அமரர் சேலம் ஏ.மாதுராஜ் உள்ளிட்ட நேயர்களுக்கு இவ்வேளையில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்னும் நிறைய எழுதிக் கொண்டே செல்லலாம். வேறொரு வாய்ப்புக் கிடைத்தால், இன்னும் விரிவாக எழுதலாம். நான் பொறுப்பானதொரு பணியில் இருப்பதால், இந்த அளவிற்கு மட்டுமே என்னால், சீன வானொலிக்காக பங்களிக்க முடிந்தது. பணி ஓய்விற்குப் பின், என் இரண்டாவது ஆட்டம் தொடங்கும் எனவும், சீன வானொலியுடனான என் உறவு என்றும் தொடரும் எனவும் உறுதி கூறி விடைபெறுகின்றேன். நன்றி. வணக்கம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040